சென்னையிலிருந்து சுமார் 70 கிலோமீட்டரும், காஞ்சிபுரத்திலிருந்து 15 கிலோமீட்டரும் தூரம் கொண்ட பரந்தூரில் புதிய இரண்டாவது விமான நிலையம் அமைய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்கு எதிராக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், போராட்டக்குழுவினர் இரண்டாவது முறையாக அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டதால் போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் 13 கிராமங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பரசன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். அந்தக் கூட்டத்தில் போராட்டக்குழுவினர் விமான நிலையத்தால் விவசாய நிலங்கள் அழிக்கப்படுவதோடு, அங்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த தங்களது கருத்துக்களை மீண்டும் எடுத்து வைத்து விமான நிலையம் வேண்டாம் என்று வலியுறுத்திவிட்டு வந்தனர். இந்தக் கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகையும் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''நான் மக்களோடுதான் இருப்பேன்'' எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், பரந்தூர் விமானநிலையம் அவசியமாக அமைக்கப்படும் என அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''மதுரை விமான நிலையத்திற்கு நிலம் எடுக்கும் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளது. விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்று பொங்கல் பரிசில் கரும்பு வழங்கப்பட உள்ளது. பரந்தூர் விமான நிலையம் 100% கட்டாயம் வரும். சென்னையின் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் மிகவும் அவசியம். எந்தப் பிரச்சனையானாலும் மக்களிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்'' எனத் தெரிவித்துள்ளார்.