Skip to main content

அனுமதியின்றி வெட்டி அழிக்கப்பட்ட பனை மரங்கள்... அதிர்ச்சியான உரிமையாளர் கதறல்...

Published on 06/08/2021 | Edited on 06/08/2021

 

Palm trees cut down without permission

 

நிலத்தடி நீரை மீட்க, மண் அரிப்பை தடுக்க இயற்கை சீற்றங்களை தாங்கி நிற்கும் பனை மரங்களை அதிகமாக நடவேண்டும் என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தொடங்கிய விழிப்புணர்வையடுத்து இன்றைய மாணவர்கள், இளைஞர்கள், இயற்கை ஆர்வளர்கள் வரை பனை விதைகளை சேகரித்து ஏரி, குளக்கரைகள், சாலை ஓரங்களில் விதைத்து வருகின்றனர். கடந்த ஆட்சி காலத்தில் அரசாங்கமே பனை விதைகளை கொள்முதல் செய்து சமூக ஆர்வலர்கள் மூலம் பொது இடங்களில் விதைக்கப்பட்டது. அதே போல தனிநபர்களும் தங்கள் தோட்டங்கில் பனை விதைத்துள்ளனர்.

 

ஆனால், மற்றொரு பக்கம் நன்கு வளர்ந்து கஜா புயலையும் எதிர்கொண்டு நிமிர்ந்து நிற்கும் பனை மரங்களை செங்கல் சூளைகளுக்கென்று ரூ.100, 200க்கும் வாங்கி வெட்டி ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த சில வருடங்களில் மட்டும் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் அரசு மற்றும் தனியார் நிலங்களில் நின்ற சுமார் ஒரு லட்சம் பனை மரங்கள் வெட்டி எரிக்கப்பட்டுள்ளன. பனை மரங்களை பாதுகாக்க வேண்டும் என்று கிரீன் நீடா உள்ளிட்ட சமூக அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் போராட்டங்கள் நடத்தினார்கள். தமிழ்த்தேசியப் பேரியக்கம் தலைவர் பெ.மணியரசன் பனை பாதுகாப்புச் சட்டம் வேண்டும் என்று வலியுறுத்தினார். 

 

Palm trees cut down without permission

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் பனை மரங்களை வெட்டியவர்களை ரூ.5 ஆயிரத்திற்கு கிராமங்களுக்கு மரக்கன்று வாங்கி கொடுக்கச் செய்தனர். ஆனால் இவை எதையும் கவணத்தில் கொள்ளாத பனை மரத்திருடர்கள் இன்னும் பனை மரங்களை திருடிக்கொண்டிருக்கின்றனர். கேட்டால் தனியார் நிலத்தில் மரத்தின் உரிமையாளரிடம் பணம் கொடுத்து வாங்கி வருவதாக கூறுகின்றனர்.

 

ஆனால் சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் வாழரமாணிக்கம் கிராமம் அருகே உள்ள பாம்பரம்பட்டியில் அதே பகுதியைச் சேர்ந்த தங்கராசு என்பவரின் தோட்டத்தில் ஓரமாக நின்ற 32 பனை மரங்களை அவருக்கே தெரியாமல் சிலர் வெட்டி திருடிச் சென்றுள்ளனர். இதனால் செய்வதறியாது திகைத்து நிற்கிறார் மரங்களின் உரிமையாளர் தங்கராசு. இப்படித்தான் பல ஆயிரம் பனை மரங்களை வெட்டி வீழ்த்தி இருக்கிறார்கள். அதனால் பெ.மணியரசன் கூறியது போல பனை பாதுகாப்பு சட்டம் இயற்றினால் தான் எஞ்சியுள்ள பனைமரங்களையாவது காப்பாற்ற முடியும். இல்லை என்றால் சில வருடங்களில் பனை இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும். நிலத்தடி நீர் கீழே போய் தமிழகமே வறண்ட பூமியாக மாறும் என்கின்றனர் பெ.மணியரசன் ஆதரவாளர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்