பழனி முருகன் கோவில் உதவி ஆணையரை காரோடு சிறை பிடித்த அப்பகுதி சாலையோர வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலை சீசன் தொடங்கியுள்ளது. இதனால் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் பழனிக்கு வருவதையும் வாடிக்கையாகக் கொள்வதால் தற்பொழுது பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பக்தர்கள் அதிகமாக வருவதால் சாலையோரங்களில் இருக்கும் கடைகள் இடையூறாக இருப்பதாகக் கூறி அகற்றப்பட்டன. உதவி ஆணையர் லட்சுமி தலைமையில் இந்தப் பணி நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. அப்பொழுது கோவில் பாதுகாவலர்கள் கடைக்காரர்களைத் தாக்கியதோடு, பொருட்களைப் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 50க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் கோவிலின் உதவி ஆணையர் லட்சுமியை காரோடு சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவம் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் வியாபாரிகளைச் சமாதானப்படுத்தினர். இதனால் அங்கு சற்று நேரம் பதற்றம் நிலவியது.