திண்டுக்கல்லில் இருந்து பழனி செல்லும் சாலையில் அமைந்துள்ளது ரெட்டியார் சத்திரம். இதனையொட்டி பழநி வழியாக பாலக்காடு வரை செல்லும் ரயில்வே தண்டவாள வழித்தடம் அமைந்துள்ளது. இந்த ரெட்டியார் சத்திரத்திலிருந்து தாதன்கோட்டை, புதுக்கோட்டை, மன்னார் கோட்டை உள்பட சில கிராமத்திற்குச் செல்லும் கிராமச் சாலையில் ஒரு ரயில்வே கேட் அமைந்துள்ளது.
ஒவ்வொரு முறையும் இந்த வழித் தடத்தில் ரயில் செல்லும்போது கேட் கீப்பர் உரிய நேரத்தைக் கண்காணித்து இரு பக்கமும் வரும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி சங்கிலியால் கேட்டை பூட்டுவது வழக்கம்.
இந்த நிலையில் தான் திண்டுக்கல்லில் இருந்து பழனி நோக்கி சரக்கு ரயில் ஒன்று சென்றது. அப்போது ரெட்டியார் சத்திரம் ரயில்வே கேட் கீப்பர் பணியில் இல்லாத காரணத்தால் அங்கு இருந்த ரயில்வே சங்கிலி கேட் பூட்டப்பட வில்லை. அதுனால் சாலையின் இருபுறமும் வாகனங்களில் வந்த பொதுமக்கள் ரயில் வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து நின்றனர்.
அப்போது சம்பந்தபட்ட ரயில்வே கேட்டை ரயில் நெருங்கியபோது உரிய சிக்னல் கிடைக்காததால் சந்தேகமடைந்த ரயில் என்ஜின் ஓட்டுனர்கள் ரயில்வே கேட்டிற்கு சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு முன்னதாக ரயிலை நிறுத்தினர். அதன்பின் அந்த ரயிலில் பணியில் இருந்த இரு ரயில் எஞ்சின் ஓட்டுநர்களில் ஒருவர் ரயிலில் இருந்து கீழே இறங்கி ஓடிவந்தது, கேட் பூட்டப்படாமல் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவரே சங்கிலியால் ரயில்வே கேட்டை பூட்டினார். அதன் பின் மற்றொரு எஞ்சின் டிரைவர் மெதுவாக ரயிலை இயக்க, அந்த கேட்டை கடந்து ரயில் சென்றது. கீழே இறங்கி வந்த ரயில் என்ஜின் டிரைவர் வேகமாக ஓடிச்சென்று ரயிலில் ஏறி தனது பணியை மீண்டும் தொடர்ந்தார்.
ரயில் என்ஜின் ஓட்டுநர்களின் சாதுரியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.