தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயில் உள்ளது. இப்படிப்பட்ட மூன்றாம் படைவீடான பழனி முருகனுக்கு வருடந்தோறும் தைப்பூசத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு பழனி தைப்பூசத் திருவிழா 21ம் தேதி நடக்க இருக்கிறது. இதற்காக பக்தர்கள் காரைக்குடி தேவகோட்டை மேலூர் நத்தம் திருச்சி மணப்பாறை திண்டுக்கல் மதுரை தேனி பெரியகுளம் கம்பம் பொள்ளாச்சி உடுமலை திருப்பூர் அவிநாசி கரூர் ஈரோடு உள்பட தமிழகத்தில் இருந்து பெரும்பாலான மாவட்டங்களில் இருந்து முருக பக்தர்கள் காவடி எடுத்துக்கொண்டும், பாத யாத்திரையாகவும் தினசரி ஆயிரக்கணக்கானோர் நடந்து வருகிறார்கள்.
.
இப்படி நடைபயணமாக வரும் முருக பக்தர்களுக்கு அங்கங்கே சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பால், பிஸ்கட், டிபன், சாப்பாடு, பழங்கள் கொடுத்து தங்குவதற்கும் வசதிகள் செய்து கொடுத்து வருகிறார்கள். அதுபோல் அங்கங்கே பழனி தண்டாயுதபாணி தேவஸ்தானம் மூலம் கட்டி வைக்கப் பட்டிருக்கும் தங்கும் இடங்களிலும் முருக பக்தர்கள் தங்கி வருகிறார்கள். அதுபோல் பாதயாத்திரையாக செல்லும் முருக பக்தர்களுக்காக ரெட்டியார் சத்திரத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக சென்னையை சேர்ந்த
பிரலயசேமா தொண்டு நிறுவனம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெறுவது வழக்கம். அதுபோல் குழிப்பிறை அழகு ஆட்சி வீடு சோலை சந்திரசேகர் செட்டியார் குடும்பத்தினர் சார்பில் அன்னதானம் நடைபெறுவது வழக்கம். அது போல் இந்த ஆண்டும் முருக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் சென்னையை சேர்ந்த பிரலயசேமா தொண்டு நிறுவனம் சார்பில் டாக்டர் டி.ஆர்.பரிக் குழுவினருடன் மற்றும் ரெட்டியார் சத்திரம் அருகே உள்ள தாதன் கோட்டையை சேர்ந்த இளம் டாக்டர்களான எஸ்.கீர்த்தனா. கே.பிரியா ஆகியோர் சமூக ஆர்வத்துடன் கலந்து கொண்டு பாத யாத்திரையாக செல்லும் முருக பக்தர்களுக்கு உடல்நலம் சிகிச்சை அளித்தும் மருந்து, மாத்திரையும் கொடுத்து மருத்துவ சேவைகளும் செய்தனர். அங்கங்கே சமூக ஆர்வலர்கள் பலரும் அரசு சார்பிலும் மருத்துவ முகாம்களும் போட்டு முருக பக்தர்களுக்கு மருத்துவ சேவைகளை செய்து வருகிறார்கள்
.
இதுபற்றி பாதை யாத்திரையாக பழனிக்கு செல்லும் முருக பக்தர்கள் சிலரிடம் கேட்டபோது.....
வருடந்தோறும் தைப்பூசத்துக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். இப்படி செல்லக்கூடிய என்னைப் போல் உள்ள பல ஆயிரக்கணக்கான முருக பக்தர்களுக்கு தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் மருத்துவ சேவைகளும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை . ஆனால் தண்ணீர் பிரச்சினை தான் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இதற்கு முன்பு தைப்பூசத்திற்கு நடந்து வரும் முருக பக்தர்களுக்கு எல்லாம் அங்கங்கே வாட்டர் பாக்கெட்டுகளை கொடுப்பார்கள். அதை நாங்கள் வாங்கி வைத்துக்கொண்டு எப்பொழுது தண்ணீர் தேவைப்படுகிறதோ அப்போது குடித்து கொள்வோம். ஆனால் தற்பொழுது பிளாஸ்டிக்கை அரசு தடை விதித்திருப்பதால் பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. அதனால் பக்தர்கள் பணம் போட்டு 25. ரூபாய்க்கும், 50 ரூபாய்க்கும் குடிநீர்பாட்டிலை வாங்கிக் கொண்டு தான் செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறோம். அதைப்பற்றி கூட எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் தண்ணீர் பாட்டிலையும் தூக்கிக் கொண்டே பல கிலோமீட்டர் நடந்து போவது தான் கஷ்டமாக இருக்கிறது. அதனால சமூக ஆர்வத்துடன் முருக பக்தர் களுக்கு உதவி செய்யும் பொதுமக்கள் இனி உணவுடன் தண்ணியும் அங்கங்கே முருக பக்தர்களுக்கு கொடுத்து உதவினால் நன்றாக இருக்கும் என்று கூறினார்கள்.
முருகனை தரிசிக்க நடை பயணமாக செல்லும் முருக பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அங்கங்கே தண்ணீர் பந்தல் அமைத்து அவர்களின் தாகத்தைத் தீர்க்க முன் வர வேண்டும் என்பதுதான் முருக பக்தர்களின் கோரிக்கையாகவும் இருந்து வருகிறது.