கிருஷ்ணகிரி அருகே, பெயிண்ட் அடிக்கும் தொழிலாளியை தலையைத் துண்டித்துக் கொலை செய்தது ஏன் என கைதான வாலிபர் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள எலுவப்பள்ளியைச் சேர்ந்த வெங்கடேசப்பா மகன் பிரதீப் (வயது 25). கட்டடங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி சந்திரிகா. இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும், நான்கு மாதத்தில் ஆண் குழந்தையும் உள்ளது.
கர்ப்பிணியாக இருந்த சந்திரிகா, நான்கு மாதத்திற்கு முன்பு இரண்டாவது பிரசவத்திற்காக பெங்களூருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். அதனால் எலுவப்பள்ளியில் உள்ள வீட்டில் பிரதீப் மட்டும் தனியாக இருந்து வந்தார்.
இந்நிலையில், பிப். 8- ஆம் தேதி இரவு உள்ளூரில் உள்ள மாரியம்மன் கோயில் திடலில் பிரதீப் கொலை செய்யப்பட்டு, அவருடைய தலை மட்டும் ரத்த வெள்ளத்தில் கிடந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த உள்ளூர்க்காரர்கள், இச்சம்பவம் குறித்து பாகலூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
மோப்ப நாய் உதவியுடன் பிரதீப்பின் சடலத்தைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். தலை கிடந்த இடத்தில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் கேழ்வரகு கொல்லை பகுதியில் அவருடைய சடலத்தைக் கைப்பற்றினர்.
பெண் விவகாரத்தில் பிரதீப் கொலை செய்யப்பட்டாரா? கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். காவல் ஆய்வாளர்கள் பாஸ்கர் (பாகலூர்), மனோகரன் (சூளகிரி) ஆகியோர் தலைமையில் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
விசாரணையில், பிரதீப்புக்கும் அவருடைய உறவினரான சந்தோஷ் (வயது 25) என்ற வாலிபருக்கும் நிலம் விற்பனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளதும், அதன் காரணமாக அவர்களுக்குள் பலமுறை தகராறு ஏற்பட்டு, பேசிக்கொள்ளாமல் இருந்து வந்ததும் தெரிய வந்தது.
மேலும், பிரதீப் கொலைக்குப் பிறகு சந்தோஷ் உள்ளூரில் இல்லாமல் திடீரென்று தலைமறைவாகிவிட்டதும், அவருடைய செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்ததும் அவர் மீது சந்தேகத்தை வலுக்கச் செய்தது.
இதற்கிடையே, அவர் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரை லாவகமாக பிடித்து வந்த காவல்துறையினர், தங்கள் பாணியில் விசாரித்தனர்.
காவல்துறை விசாரணையில் சந்தோஷ், ''நிலத்தகராறில் பிரதீப்புடன் எனக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. பல பேர் முன்பு என்னை அவன் கேவலமாகப் பேசியதால்தான், அவனை தலை வேறு முண்டம் வேறாக வெட்டிக்கொலை செய்து, ஊர் மக்கள் பார்க்கும்படி கோயில் திடலில் தலையை வீசிவிட்டு தப்பிச்சென்று விட்டேன்,'' என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சந்தோஷை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.