தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடி கிராமத்தில் மரம் தங்கசாமிக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசும் போது..
தமிழ்நாட்டில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தியவர் சேந்தன்குடி கற்பகசோலை மரம் பெ.தங்கசாமி. அரசு, தனியார் நிறுவன விழாக்கள், திருமணம், குழைந்தை பிறப்பு, அரசியல் தலைவர்களின் மறைவு, நினைவு தினம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளின் நினைவாக மரக்கன்றுகள் நட்டும் வழங்கியும் ஊக்கப்படுத்தி வந்தார்.
வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களோடு தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டங்களை நடத்தினார். தனது வீட்டை சுற்றி சுமார் 4 ஏக்கர் தோட்டத்தில் தேக்கு, செம்மரம், சந்தனம் உள்ளிட்ட சுமார் 200 வகையான மரங்களை ஆயிரக் கணக்கில் வளர்த்துள்ளார். அதை பார்ப்பதற்கு பசுமை சூழ்ந்த சொர்க்க பூமியாக காட்சியளிக்கிறது. பாலைவனத்தையும் சோலைவனமாக மாற்ற முடியும் என்பதை தனது உழைப்பால் நாட்டுக்கு உணர்த்தியுள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் அவரை மரம் தங்கசாமி என்று அன்போடு அழைத்து வந்துள்ளனர்.
இவரது வாழ்க்கை எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது. இவருடைய தொலைநோக்கு பார்வையுடனான வாழ்க்கை பாதையை தமிழக பள்ளி பாடத்திட்டத்தில் அரசு இணைத்திட வேண்டும் என்றார்.
மேலும் இவரது மறைவையொட்டி அஞ்சலி செலுத்த வரும் அனைவருக்கும் பசுமை கரங்கள் அமைப்பும், குடும்பாத்தாரும் இணைந்து இலவசமாக மரக்கன்றுகள் வழங்கியும், நட்டும் வருகின்றனர் என்றார்.
மேலும் பி.ஆர்.பாண்டியன் மரங்களை வழங்க பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு பெற்றுக்கொண்டார். இவருடன் பள்ளத்தூர் முருகையன், மன்னை மனோகரன், சமூக ஆர்வலர்கள் விவசாயிகள் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.