அரசியல் வட்டாரத்தில் பத்மராஜனை அனேகரும் அறிந்திருப்பர். ஏனென்றால், பத்மராஜனுக்கு தேர்தல் மன்னன் என்ற அடையாளமுண்டு. 239வது தடவையாக தேர்தலில் போட்டியிடும் பத்மராஜன், தர்மபுரி பாராளுமன்றத் தொகுதியில் முதல் ஆளாக வேட்பு மனுத் தாக்கல் செய்திருக்கிறார். தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சாந்தியிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார் பத்மராஜன்.
கே. பத்மராஜன் என்பவர் ‘தேர்தல் மன்னன் பத்மராஜன்’ என அறியப்படும் ஒரு சாதனையாளர். சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த இவர் ஒரு ஹோமியோபதி மருத்துவர். இவர் இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் பல முறை போட்டியிட்டு் உள்ளார். லிம்கா, கின்னஸ் போன்ற சாதனை புத்தகங்களில் சாதனையாளராக இடம் பெற்றிருக்கிறார். இவர் கடந்த 1988ம் ஆண்டு முதல் இந்திய நாட்டில் நடக்கும் பல்வேறு தேர்தல்களில் வேட்பு மனுத் தாக்கல் செய்து வருகிறார். அவர் பி.வி. நரசிம்மராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங் உள்ளிட்ட பிரதமர்கள், திமுக தலைவர் கலைஞர், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, எடியூரப்பா, தேவ கெளடா, ஏ.கே. அந்தோணி என பல முக்கிய தலைவர்களை எதிர்த்து போட்டியிட்டுள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலிலும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்தியா முழுவதும் சட்டசபை, நாடாளுமன்றம் உள்ளிட்ட பல தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறார். கடந்த 2003ம் ஆண்டு லிம்கா சாதனை புத்தகத்திலும், கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளார். பாராளுமன்றத் தேர்தலில், இன்று தர்மபுரி மாவட்ட பாராளுமன்ற தொகுதிக்கு முதல் ஆளாக வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, “தேர்தலில் வெற்றி பெற மாட்டேன் என்று நன்றாகத் தெரிந்தும் ஏன் வீணாக வேட்பு மனுத் தாக்கல் செய்கிறீர்கள் என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். அவர்கள் சொல்வது என்னவோ உண்மை தான். கடந்த 1988ம் ஆண்டு முதல் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். இன்று 239 ஆவது முறையாக வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளேன். நான் எந்த அரசியல் கட்சியையும் சாராதவன். சுயேட்சையாகவே போட்டியிட்டு வருகிறேன். இந்தியா முழுவதும் சட்டசபை, நாடாளுமன்றம் உள்ளிட்ட பல தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறேன்.
கடந்த 2003ம் ஆண்டு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றேன். கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளேன். சாதனைக்காகவே இப்படிப் போட்டியிட்டு வருகிறேன். இப்படி போட்டியிட்டு டெபாசிட் இழப்பதன் மூலம் பெரிய அளவில் பொருளாதாரம் இழந்து வந்தாலும், தொடர்ந்து சாதனை செய்ய வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் எனது வருவாய் முழுவதையும் தேர்தலில் போட்டியிடுவதற்கே செலவிட்டு வருகிறேன்” என்றார்.