கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகில் சாத்தமங்கலம் கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் ரகுமான் என்பவர் எழுத்தராகவும் தியாகராஜன் என்பவர் லாரிக்கு லோடு ஏற்றும் தலைமை தொழிலாளியாகவும் வேலை செய்து வருகிறார்கள். இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் அப்பகுதியைச் சுற்றிலும் உள்ள கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பூதங்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முகுந்தன் என்பவர் தனது வயலில் அறுவடை செய்த சுமார் 450 மூட்டை நெல்லை விற்பனை செய்வதற்காக மேற்படி சாத்தமங்கலம் நெல் கொள்முதல் நிலையத்திற்கு விற்பனைக்கு எடுத்துச் சென்றுள்ளார். எடை போட்டு லாரிக்கு லோடு ஏற்றும் தலைமை தொழிலாளி தியாகராஜன் எழுத்தர் ரகுமான் இருவரும் எடை போடுவதற்கு ஒரு மூட்டை ஒன்றுக்கு 55 ரூபாய் வீதம் மொத்தம் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என்று எழுத்தர் ரகுமானும் லோடு மேன் தியாகராஜனும் கேட்டுள்ளனர். தான் மழையிலும் வெயிலிலும் கடுமையாக உழைத்து விளைய வைத்த நெல்லை அரசு கொள்முதல் செய்வதற்கு இவர்களுக்கு ஏன் கமிஷனாக 25 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று கோபமடைந்த முகுந்தன் இது குறித்து கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளார்.
அவரது புகாரை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் முகுந்தனிடம் ரசாயனம் தடவப்பட்ட லஞ்ச பணம் 25 ஆயிரம் ரூபாயை சம்பந்தப்பட்டவர்களிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர். அதன்படி நேற்று லஞ்சப் பணத்தை எடுத்துக்கொண்டு கொள்முதல் நிலையத்திற்குச் சென்ற முகுந்தன்., தலைமை லோடுமேன் தியாகராஜனிடம் அந்த பணத்தை வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன், இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் தியாகராஜனை கையும் களவுமாகப் பிடித்தனர். கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக எழுத்தர் ரகுமானும் லோடுமேன் தியாகராஜன் இருவரையும் கைது செய்த போலீசார் சிதம்பரம் வேளாண் மண்டல அலுவலகத்தில் வைத்து அவர்கள் இருவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். பின்பு கைது செய்யப்பட்டு அவர்கள் இருவரையும் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர்.