தமிழகத்தில் கடந்த ஒருமாதமாக பெய்த தொடர் மழையால் ஒட்டுமொத்த விளைநிலங்களும் நாசமானது. வயல்களிலேயே கதிர்கள் முளைத்துவிட்டது. மேலும் மழைக்கு முன்பே அறுவடை செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்ட நெல் மூட்டைகளை, மழை காரணமாக கொள்முதல் செய்யாததால் குவித்து வக்கப்பட்டிருந்த நெல் மணிகளும் முளைத்துவிட்டன.
நேற்று முன்தினம் (16/01/2021) புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த (ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள்) நெல் குவியல்கள், தொடர் மழையால் முளைத்து பயிர் வந்திருந்ததை அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், நேரில் சென்று பார்வையிட்டு விவசாயிகளின் குமுறல்களைக் கேட்டு உடனே மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து தொலைபேசியில் பேசினார்.
இதுகுறித்து நேற்று முன்தினம், ‘நக்கீரன்’ இணையத்தில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்ட நிலையில், மீண்டும் நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் கொள்முதல் நிலையம் திறக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று (18/01/2021) திங்கள்கிழமை காலை விவசாயிகளின் நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்ய தொடங்கியுள்ளனர்.