தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று (27/08/2021) நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை மற்றும் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது, சட்டப்பேரவையில் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, "ஒரு கோட்டத்தில் ஒரே ஒப்பந்ததாரர் சாலைப் பணியை மொத்தமாக எடுக்கும் பேக்கேஜ் முறை இன்று முதல் ரத்துச் செய்யப்படுகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் கூடுவாஞ்சேரி- மீஞ்சூர் வெளிவட்ட சாலை அமைப்பதில் ரூபாய் 1,886.40 கோடி நஷ்டம் ஏற்பட்டது. பரனூர், வானகரம், சூரப்பட்டு, சென்னசமுத்திரம், நெமிலி சுங்கச் சாவடியை அகற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். சட்டப்பேரவைக் கூட்டத்தொடருக்கு பின் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்து வலியுறுத்தப்படும். பரனூர் உள்ளிட்ட ஐந்து சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு ஏற்கனவே முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். தரமற்ற சாலைகளை அமைத்த ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தரமற்ற சாலைகளை அமைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
O.M.R. சாலையில் ஆகஸ்ட் 30- ஆம் தேதி முதல் சுங்கக் கட்டண வசூல் நிறுத்தப்படும். சென்னை மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்படுவதையொட்டி, சுங்கக் கட்டண வசூல் நிறுத்தப்படுகிறது. அதேபோல், பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை, மேடவாக்கம் சாலைகளில் உள்ள நான்கு சுங்கச் சாவடிகளில் வசூல் நிறுத்தப்படுகிறது. மத்திய கைலாஷ் சந்திப்பில் ரூபாய் 56 கோடியில் மேம்பாலம் கட்டப்படும்" எனத் தெரிவித்தார்.
முன்னதாக, சட்டப்பேரவையில் இன்று (27/08/2021) நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை மற்றும் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுவதையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு வாழ்த்துப் பெற்றார்.