இந்திய குடிமைப்பணி தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடிய போது, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, 'ஆளுநர் கிடப்பில் வைத்துள்ள மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என்றும், நிறுத்தி வைக்கப்படும் மசோதாக்களை குறிப்பிடுவதற்கு வார்த்தை அலங்காரத்திற்காகவே நிறுத்திவைப்பு என்கிறோம் என்றும், நிறுத்தி வைத்தாலே அது நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம்’ என்றும் கூறியிருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம், “சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பதற்குத் தமிழக ஆளுநர் ஒரு விசித்திரமான விளக்கத்தைக் கொடுத்துள்ளார். அப்படி நிலுவையில் வைக்கப்படுவதன் அர்த்தம் மசோதா இறந்து விட்டது என்று அர்த்தம் என ஆளுநர் கூறியுள்ளார். உண்மையில், சரியான காரணமின்றி ஒரு ஆளுநர் ஒப்புதலைத் தடுத்து நிறுத்தினால், 'பாராளுமன்ற ஜனநாயகம் இறந்து விட்டது' என்று அர்த்தம். ஆளுநர் என்பவர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவதற்கு அல்லது ஒப்புதலை நிறுத்துவதற்கு அல்லது மசோதாவை திரும்பப் பெறுவதற்குக் கட்டுப்பட்டவர்.
இந்த மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டால், ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆளுநர் வெறும் அரசியல் சட்ட பதவி மட்டுமே. அரசின் அடையாள தலைவராக அவர் இருப்பார். அவருக்கு அதிகாரங்கள் குறைவுதான். பெரும்பாலான விஷயங்களில் ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. முதல்வர் மற்றும் அமைச்சரவையின் பேரில்தான் ஆளுநர் செயல்பட வேண்டும். ஆனால் பாஜகவால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் தங்களது அதிகாரத்தை மீறி ஜனநாயகத்தைக் காலில் போட்டு மிதிக்கிறார்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாகச் சாடியுள்ளார்.