தமிழக அரசு மருத்துவமனைகளில் உள்ள கரோனா வார்டுகளில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகளுக்கு கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணிக்கு ரூபாய் 135 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 62 கோடியும், மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூபாய் 70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இரண்டு லாரிகளுக்குப் பதில் ஐந்து லாரிகளில் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 3,777 படுக்கைகள் உள்ளன. இதில் 2,353 படுக்கைகள் காலியாக உள்ளன. இரண்டு கரோனா சிகிச்சை மையங்களில் கூடுதலாக 700 படுக்கைகள் உள்ளன. வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய 600 படுக்கைகளில், 295 படுக்கைகள் தற்போது பயன்படுத்தப்பட்டுள்ளன. மதுரை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் 30,000 லிட்டர் திரவ நிலை ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது. நாளொன்றுக்கு 10,000 லிட்டர் திரவ நிலை ஆக்சிஜன் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.