திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவாளர் முன்பு நிலத்தின் உரிமையாளர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
தேனி மாவட்டம் காமக்காப்பட்டியைச் சேர்ந்த விவசாயி துரைசிங்கம் குடும்பத்தினர் தங்கள் வசம் வைத்திருந்த 90 சென்ட் விவசாய நிலத்தை மற்றொரு நபருக்கு விற்பனை செய்வதற்கு பதிவாளர் அலுவலகம் வந்துள்ளனர். ஏற்கெனவே அப்பகுதியில் உள்ள நிலங்கள் விவசாய நிலமாக பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது பதிவாளர் அலுவலகத்தில் துரைசிங்கம் நிலத்தை விவசாய நிலமாக பதிவு செய்ய முடியாது என்றும் சதுரடி நிலமாகத்தான் பதிவு செய்வோம் என்றும் கூறப்பட்டுள்ளது. தாங்கள் வைத்திருப்பது விவசாய நிலம்தான் என்று துரைசிங்கம் குடும்பத்தினர் பல்வேறு ஆவணங்களை சமர்ப்பித்த போதிலும் கடந்த 45 நாட்களாக பத்திரம் பதிவு செய்யப்படாமல் அலைக்கழிக்க பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த துரைசிங்கம் குடும்பத்தினர் இன்று சார்பதிவாளர் முன்பு பத்திரத்தை பதிவு செய்ய வலியுறுத்தி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதனைத் தொடர்ந்து அங்கு வந்த வத்தலக்குண்டு போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். வத்தலக்குண்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும் வில்லங்கச் சான்று, பிறப்புச் சான்று மற்றும் பல்வேறு சான்றுகளை வழங்குவதற்கு நாள்தோறும் அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள் பத்திரப்பதிவு அலுவலகத்தில் தகராறில் ஈடுபடுவது வாடிக்கையாகி உள்ளது. எனவே வத்தலகுண்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடு மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.