கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியைச் சேர்ந்த நாகராஜ், காந்தி நகர் பேருந்து நிறுத்தம் பக்கத்தில் வாடகைக்கு கடையை எடுத்து பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார். கடைக்கு மாத வாடகையாக 25 ஆயிரம் ரூபாயை கொடுத்து வந்து இருக்கிறார். ஆனால் கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் 4 மாதங்களாக பேக்கரியை திறக்கவில்லை.
இந்நிலையில் அடிக்கடி கடைக்கு வாடகை கேட்டுள்ளார் கடையின் உரிமையாளர் சண்முகசுந்தரராஜ். என்ன செய்வதெனத் தெரியாமல். நாகராஜ் அங்கும் இங்கும் கடன் வாங்கி 38 ஆயிரம் ரூபாயை அளித்துள்ளார். ஆனாலும் மீதி தொகையை கேட்டு சண்முகசுந்தரராஜ் அவரது மனைவி மற்றும் அவரது மகன் விக்னேஷ்பிரபு ஆகியோர் கேட்டுக் கொண்டே இருக்க, நாகராஜ் இரண்டு மாத காலம் கால அவகாசம் கேட்டுள்ளார்.
ஆனால் சண்முக சுந்தரராஜ் அந்த கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களையும் மிரட்டியிருக்கிறார்கள். அதோடு, சண்முகசுந்தரராஜூம் அவரது மனைவி மற்றும் அவரது மகன் மேலும் இருவரும் கடைக்குள் நுழைந்து கடப்பாரை ஆகிய பொருட்களைக் கொண்டு நாகராஜை தாக்கியுள்ளனர்.
இதையொட்டி புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வந்தார்கள் நாகராஜூம் அவரது மனைவியும். அப்போது அவர்கள், ”சண்முக சுந்தரராஜ் கும்பல் கடையை சேதப்படுத்தியதோடு கடையில் வைத்திருந்த 7,342 ரூபாயை எடுத்துக் கொண்டார்கள். அதுபோக பூர்த்தி செய்யப்படாத காசோலைகளையும் எடுத்து விட்டனர். இதுகுறித்து போத்தனூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தோம்.
அங்கு வந்த காவல்துறையினர் அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது காவல்துறையினரிடம் விக்னேஷ்பிரபு எடுத்து வைத்துக் கொண்ட பணம் மற்றும் காசோலைகளை பெற்றுத் தருமாறு கேட்டோம்.
ஆனால் போலீசாரிடம் இன்று, நாளை என இழுத்தடித்துக் கொண்டே இருக்கிறார்கள். அதனால்தான் கோவை மாநகர காவல் ஆணையரிடம் இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி புகார் கொடுத்தோம். சண்முகசுந்தரராஜ் அவரது மனைவி, மகன் மற்றும் சம்பவத்தன்று ஈடுபட்ட மேலும் இரண்டு நபர்கள் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறும் புகார் அளித்தோம். எங்கள் உயிருக்கு பாதுகாப்பு அளிக்கவும் கேட்டு இருக்கிறோம்” என்றார்கள் கண்ணீர் மல்க.
கரோனா காலத்தில் வாடகை கேட்க வேண்டாம் என்கிற அரசின் உத்தரவு காற்றில் எழுதியே வைக்கப்பட்டிருக்கிறது என்கிற குரல்கள் நாடெங்கும் கேட்டுக் கொண்டே இருக்கின்றன என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.