அரியலூரில் பெட்ரோல் டேங்கர் லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அரியலூர் மாவட்டம் தவுதாய்க்குளம் கிராமப் பகுதியில் வெங்கடேஸ்வரா பெட்ரோல் பங்க் உள்ளது. இந்தப் பெட்ரோல் பங்கிற்கு திருச்சியில் இருந்து டேங்கர் லாரியில் பெட்ரோல் மற்றும் டீசல் கொண்டுவரப்பட்டது. சுமார் 4000 லிட்டர் பெட்ரோல் மற்றும் 8,000 லிட்டர் டீசல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி வந்து கொண்டிருந்தது. அப்பொழுது லாரி ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதில் அரியலூர் அருகே உள்ள வாரணாசி என்ற இடத்தில் பிள்ளையார் கோவில் அருகே வந்துகொண்டிருந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக உள்ள ஒரு மின்கம்பத்தில் மோதி தலைகுப்புற விழுந்தது. இதனால் டேங்கர் லாரியில் இருந்த மொத்த பெட்ரோல், டீசல் கீழே கொட்டி வீணானது. உடனடியாக இந்த விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் கீழே ஊற்றி வீணான பெட்ரோல் டீசலால் தீ விபத்து ஏற்படக் கூடாது என்பதற்காக நுரையுடன் கூடிய தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.