கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழக மக்கள் தேவையின்றி வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என்று முதல்வர் பழனிசாமி அறிவுறுத்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "பொது இடங்களில் அதிகளவில் கூடுவதை அடுத்த 15 நாட்களுக்கு மக்கள் தவிர்க்க வேண்டும். தமிழக எல்லைகளில் உள்ள மாவட்டங்களான கிருஷ்ணகிரி, நெல்லை, விருதுநகர், ராணிப்பேட்டை, ஈரோடு, தேனி உள்பட 16 மாவட்டங்களில் வணிக வளாகங்கள் மற்றும் தியேட்டர்களை மார்ச் 31- ஆம் தேதி வரை மூட உத்தரவு. கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்கு வயதானவர்கள் நோய்வாய்ப்பட்டவர்கள், குழந்தைகள் செல்ல வேண்டாம்.
நோய் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு. நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை வருவாய் துறை ஆணையருக்கு அனுப்ப வேண்டும். வருவாய் துறை ஆணையர் தனது அறிக்கையை முதல்வர் மற்றும் அமைச்சர்களிடம் சமர்ப்பிக்க உத்தரவு. நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்கு தெரிவிக்க சுகாதாரத்துறை அமைச்சருக்கு உத்தரவு. தமிழகத்தில் உள்ள அனைத்து மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு மார்ச் 31- ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு. வீட்டிற்குள் நுழையும் போதும், அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும். கைகளை சுத்தம் செய்யாமல் முகத்தை தொட வேண்டாம். நோய்க்கான அறிகுறி உள்ளவர்கள் உடனே அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும்.
வழிபாட்டுத் தலங்களுக்கு வருவோர்களை கண்காணிக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு. கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட மாநில பேரிடர் நிதியிலிருந்து ரூபாய் 60 கோடி நிதி ஒதுக்கீடு. அனைத்து தரப்பு மக்களும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்" இவ்வாறு அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.