தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மற்றும் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறை சார்பில் பெறப்பட்ட மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள், படித்த ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி, தாலிக்குத் தங்கம் என ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறையின் சார்பில் உதவிகள் வழங்கப்பட்டன. இதுவரை திருச்சி மாவட்டத்தில் 2,091க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
அதில் தீர்வு காணப்பட்ட மனுக்கள் 1,142. முதற்கட்டமாக 484 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பரிசீலனையில் 949 மனுக்கள் உள்ளன. பார்வைத் திறன் குறைபாடு உள்ளவர்கள் கற்க பிரெய்லி புத்தகங்களை 3 லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் மதிப்பில் 5 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், திருமண நிதியுதவி திட்டத்தின்கீழ் 26 நபர்களுக்கு 10 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில் உதவிகளும், 207 பேருக்கு 10 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம், தசைச் சிதைவு மற்றும் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட 5 மாற்றுத் திறனாளிகளுக்கு 4 லட்சத்து 99 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுவரை மொத்தம் 30 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் இன்று (06.07.2021) நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், ஸ்டாலின் குமார், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்கள், சௌந்தரபாண்டியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.