சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று (25.07.2023) நடைபெற்ற 'முதலமைச்சர் கோப்பை - 2023' மாநில அளவிலான போட்டிகள் நிறைவு விழாவில், முதலமைச்சர் கோப்பை 2023 தொடர்பான “களம் நமதே” என்ற புத்தகத்தை வெளியிட்டார். மேலும் மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள், வீராங்கனைகளுக்குப் பரிசுகளை முதல்வர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “தனிப்பட்ட முறையில் எனக்கு விளையாட்டின் மீது இருக்கும் ஆர்வத்தைப் பலரும் அறிவீர்கள். அதனால்தான் கடுமையான பணிச்சூழலுக்கு இடையிலும் இந்த நிகழ்ச்சிக்கு நான் இங்கே வந்திருக்கிறேன். நான் மட்டுமல்ல கலைஞரும் மிகப்பெரிய விளையாட்டு ரசிகர். அதனால்தான் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தினார். கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை சாந்தியை, "ஓடியது இந்தக் கால்கள் தானே" என ஆதரித்து ஊக்கப்படுத்தினார்.
கலைஞர் நல்ல விளையாட்டுப் போட்டிகளை ரசிக்கக் கூடியவர். விளையாட்டில் நேர்மையும் அறமும் வேண்டும் என்று விரும்பியவர். கலைஞரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன. வெற்றியையும் தோல்வியையும் இயல்பாக எடுத்துக் கொண்டு சளைக்காமல் போராடியவர். இதைத்தான் விளையாட்டுக் களத்தில் 'ஸ்போர்ட்ஸ்மேன் ஷிப்' என்கிறார்கள். அரசியலில் அவர் 'ஸ்டேட்ஸ்மேனாக' இருந்தார். அரசியலை அணுகுவதில் அவரிடம் 'ஸ்போர்ட்ஸ்மேன் ஷிப்' இருந்தது. விளையாட்டில் அனைவரும் அறத்தைப் பேண வேண்டும்.
விளையாட்டு வீரர்கள் மேன்மேலும் வெற்றிகளைக் குவிக்க வேண்டும். மாநில அளவில் பல போட்டிகளில் பங்கேற்றுள்ள விளையாட்டு வீரர்கள் இனி வருங்காலத்தில் இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வேண்டும். விளையாட்டு வீரர்களான நீங்கள் மட்டுமல்ல. இந்தியாவுக்காகத்தான் நாங்களும் பாடுபடுகிறோம். எங்கள் அணியும் 'இந்தியா' அணிதான். அதன் வெற்றிக்காகத்தான். நாங்களும் ஒருங்கிணைந்து 'டீம் ஸ்பிரிட்டுடன் பாடுபடுகிறோம். விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிப்பதைப் போலவே, விளையாட்டு மீதான ஆர்வத்தை அனைத்து மாணவ, மாணவியருக்கும் ஏற்படுத்த வேண்டும். வெற்றிக்காகப் பாடுபட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதியையும் விளையாட்டுத் துறை அதிகாரிகளையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.