
விருதுநகர் மாவட்டம் குகன்பாறை கிராமத்தில் உள்ள கல்குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்து, கல்குவாரிகளுக்கு இடைக்கால தடைவிதிக்க கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ’’விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா குகன்பாறை தாலுகாவில் கல்குவாரிகள் உள்ளது. இப்பகுதியில் சந்திரசேகர் மற்றும் சண்முகயா ஆகியோர் உரிமம் பெற்றும் மற்றும் உரிமம் பெறாமலும் கல்குவாரிகள் சட்டவிரோதமாக நடத்தி வருகின்றனர். ஒரு குவாரிக்கு அருகிலேயே போதிய இடைவெளி இல்லாமல் மற்றொரு குவாரி அமைத்து உள்ளனர். அரசு அனுமதித்த சட்ட விதிகளின்படி போதுமான இடைவெளி இல்லை. மேலும் கனிம விதிகளின்படி குவாரிகள் செயல்படாமல் சட்டவிரோதமாக அதிக ஆழமாக செயல்படுகிறது. எனவே விருதுநகர் மாவட்டம் குகன்பாறை கிராமத்தில் செயல்படும் கல்குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்தும், கல்குவாரி செயல்பட இடைக்கால தடைவிதித்தும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி துரைசாமி, நீதிபதி அனிதா சுமந்த் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது இது குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கினை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.