அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டுமென்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும்: ஈஸ்வரன்
வாகன ஓட்டுநர்கள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டுமென்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும்." என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
"வாகன ஓட்டுநர்கள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது நடைமுறைக்கு ஒத்து வராது. பெரும்பாலானோர் எப்போதும் அதை கையில் வைத்திருந்தால் தவறிவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. சாலை போக்குவரத்தில் எவ்வளவோ விசயங்கள் சரி செய்யப்பட வேண்டிய தேவை இருக்கும் போது பொதுமக்களை பாதிக்கின்ற இப்படிப்பட்ட உத்தரவுகள் பிறப்பித்ததை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் தவிர்த்திருக்க வேண்டும்.
தீவிரமாக யாரையாவது சந்தேகப்பட்டால் அதற்கான முகாந்திரம் இருந்தால் அசல் உரிமத்தை கொண்டு வந்து காட்ட சொல்லலாம். அதைவிடுத்து நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்றை நடைமுறைப்படுத்த நினைப்பது எந்த வகையில் ஒப்புதல் உடையதாக இருக்கும். இதுபோன்ற மக்கள் பாதிக்கப்படுகின்ற உத்தரவுகளை பிறப்பிப்பதற்கு முன்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்டிருக்க வேண்டும்.
சாலை போக்குவரத்தில் லஞ்சத்தை ஊக்குவிப்பதாக இந்த உத்தரவு இருக்கும். ஓட்டுநர் உரிமம் வழங்கும் போது குறைந்தது மூன்று அசல் ஓட்டுநர் உரிமங்களை வழங்க வேண்டும். இந்த உத்தரவின் தாக்கத்தை புரிந்துக்கொண்டு தமிழக முதலமைச்சர் தலையிட்டு நிறுத்தி வைக்க வேண்டும் என ஈஸ்வரன் கூறினார்.
- ஜீவாதங்கவேல்