நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் செலவுக் கணக்குகளை மார்ச் 24ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பிப். 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை பிப். 22ம் தேதி நடந்தது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மார்ச் 2ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். மாநகராட்சிகள், நகராட்சிகள், சிறப்புநிலை, தேர்வு நிலை நகராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக 85 ஆயிரம் ரூபாய் வரை தேர்தலில் செலவிடலாம் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதேபோல் இரண்டாம் நிலை நகராட்சிகளில் அதிகபட்சமாக 34 ஆயிரம் ரூபாயும், பேரூராட்சிகளில் அதிகபட்சமாக 17ஆயிரம் ரூபாயும் அனுமதிக்கப்பட்டு இருந்தது.
தேர்தல் முடிவுகள் வெளியான 30 நாள்களுக்குள் தேர்தல் செலவின கணக்குகளை அந்தந்த தேர்தல் அலுவலர்களிடம் வேட்பாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என ஏற்கனவே மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மார்ச் 24ம் தேதிக்குள் தேர்தல் செலவுக் கணக்குகளை வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.