மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் தை அமாவாசையன்று நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களை அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கையை, கோவில் நிர்வாகம் பரிசீலித்து முடிவெடுக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த நாகஜோதி, பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவில், ‘விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஒவ்வொரு அமாவசையன்றும், இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை நடைபெறும் ஊஞ்சல் சேவையில், ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். கடந்த ஆண்டு, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கோவில்கள் மூடப்பட்ட நிலையில், பக்தர்கள் கலந்துகொள்ள இயலாத நிலையில், இந்த ஆண்டு கட்டுப்பாடுகளுக்கான தளர்வுகள் அளிக்கப்பட்ட பின்னர், ஜனவரி மாதம் ஊஞ்சல் சேவைக்குg; பக்தர்களை அனுமதிக்கக் கோரிய எனது விண்ணப்பத்தை, கோவில் நிர்வாகம் நிராகரித்துவிட்டது.
பிப்ரவரி 11ஆம் தேதியான, தை அமாவாசை நாளன்று நடைபெறும் ஊஞ்சல் சேவையில் பக்தர்களை அனுமதிக்கும்படி தமிழக அரசு, இந்து சமய அறநிலையத்துறை, கோவில் நிர்வாகம் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும். மதுரையில் தெப்பத் திருவிழா, ஸ்ரீரங்கம் மற்றும் சென்னை திருவல்லிக்கேணியில் சொர்க்கவாசல் திறப்பு விழா ஆகிய நிகழ்வுகளில். லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்துள்ளனர்.’
எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கை மனுவை கரோனா தடுப்பு விதிகளுக்கு உட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்கும்படி, கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.