கட்சியின் ஒரேவொரு நாடாளுமன்ற உறுப்பினரை கட்சி சார்பாக செயல்படவிடாமல் தடுப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சசிகலா இன்று (22/07/2022) வெளியிட்டுள்ள அறிக்கையில், "அ.இ.அ.தி.மு.க.வின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரை கட்சி சார்பில் செயல்படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அ.இ.அ.தி.மு.க. எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதா என்ற பெண் சிங்கத்தால் பாதுகாக்கப்பட்டு வந்த ஒரு பேரியக்கம். ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் பார்த்து பொறாமைப்படும் வகையில், இந்த இயக்கத்தைத் தனித்துவத்தோடு செயல்பட வைத்தார்கள். ஜெயலலிதா நம்மையெல்லாம் விட்டுச் சென்ற நாள் முதல் இன்று வரை நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுக்கும் தொண்டர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.
ஒரு சில சுயநலவாதிகள் மேற்கொண்ட தவறான முடிவுகளால், இன்றைக்கு அதன் சிறப்பு குறைந்து வருகிறது. கட்சி தன் பெருமைகளை ஒவ்வொன்றாக இழந்து வருவதாக அ.தி.மு.க. தொண்டர்கள் கண்ணீர் வடிக்கின்றனர். கடந்த 2019- ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலேயே மிகப்பெரிய தோல்வியை இயக்கம் அடைந்தது. தோல்வி எதனால் அடைந்தோம் என்று சிந்தித்துப் பார்த்திருந்தால் அடுத்து நடைபெற்ற தேர்தல்களிலாவது வென்று இருக்க முடியும். அதுவும் நடக்கவில்லை; இயக்கம் தொடர் தோல்விகளைச் சந்தித்துக் கொண்டே இருக்கிறது.
இதைப் பற்றியெல்லாம் ஆராய்ந்து பார்க்காமல், கட்சித் தொண்டர்களைப் பற்றியும் கவலைப்படவில்லை. தன் சுய தேவைகளை மட்டும் மனதில் வைத்து ஒரு சிலரின் செயலால் இயக்கம் அழிவை நோக்கி செல்வதாக தொண்டர்கள் வேதனை அடைந்துள்ளனர். ஒரு சிலருக்கு தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் எண்ணம். பொய்யான வாக்குறுதி, நம்பிக்கையை விதைத்து ஏமாற்றிக் கொண்டனர். தனது சொந்த கட்சியினரையும், கூட்டணி அமைத்த மாற்றுக் கட்சியினரையும் நம்ப வைத்து ஏமாற்றியதுதான் மிச்சம்" என்று குறிப்பிட்டுள்ளார்.