அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே சமீபகாலமாக கருத்து வேறுபாடு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. தமிழக எதிர்க்கட்சித் தலைவராக அதிமுகவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக்கொண்டதை அடுத்து நேற்று (04.06.2021) முதல்முறையாக அதிமுக தலைமை அலுவலகத்தில் 9 மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் பங்கேற்கவில்லை. இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில், “ஓபிஎஸ்ஸுக்கும் எனக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. இன்று அவர் புது வீட்டுக்குப் பால் காய்ச்ச சென்றுள்ளதால் அவர் வரவில்லை. இன்று நல்ல நாள் என்பதால் நான் தலைமையகத்தில் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டேன்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார். அரசு பங்களாவைக் காலி செய்த ஓபிஎஸ், தற்காலிகமாக தி.நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். தற்போது அரசு பங்களாவிலிருந்து பொருட்கள் அந்த இல்லத்திற்கு மாற்றப்படும் பணிகள் நடைபெற்றுவருவதால் தனியார் விடுதியில் தங்கியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்துள்ளார்.