விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து துணை முதல்வர் ஓபிஎஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,
அதிமுக ஆட்சியில் முன்பை விட 8 மடங்கு வீடுகள் கட்டித் தரப் பட்டிருக்கிறது. அதையெடுத்து தொழிலிலும் முன்னேற்றம் பெற்று வருகிறோம். சட்டத்துறை அமைச்சராக சிவி சண்முகம் உள்ள நிலையில் 2018- 2019 இந்த இரண்டு வருடத்தில் எட்டு சட்டக் கல்லூரிகளை நிறுவிய வரலாறு இதுவரை தமிழகத்தில் இல்லை, எந்த மாநிலத்திலும் இல்லை. இது ஒரு சாதனை அல்லவா... ஜெயலலிதாவின் ஆட்சியில்தான் உயர்கல்வித் துறையில் 66 கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, ஐடி, வெட்னரி காலேஜ். இப்படி கல்லூரிகளுக்கு ஜெயலலிதா ஆற்றிய பணியில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இந்த சாதனையை செய்ய வில்லை. இவைகள் எல்லாம் சாதனைகள் இல்லையா?
அவருக்கு ஒரே ஆசை முதல்வராக வேண்டும் என்ற ஆசை, எந்த காலத்திலாவது ஆக முடியுமா? ஸ்டாலின் முதலமைச்சர் ஆக முடியுமா... முடியவே முடியாது. அவருக்கு அந்த யோகம் இல்லை என பேசினார்.
அப்போது பன்னீர்செல்வத்தின் காதில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் முணுமுணுக்க.. திரும்பவும் மக்களைப் பார்த்த ஓபிஎஸ் நமது சட்டத்துறை அமைச்சர் சொல்கிறார் ஒரு படத்தில் வடிவேலுவை பார்த்துச் சொல்வார்கள் ''நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்ட'' என்று அதுமாதிரி ஸ்டாலின் அவர்களே நீங்க அதற்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டீர்கள். மக்கள் எந்த நேரத்திலும் உங்களுக்கு ஆதரவு தரமாட்டார்கள் என்பதை இந்த நேரத்தில் நான் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.
ஏன் மக்கள் உங்களுக்கு இடைத்தேர்தலாக இருந்தாலும், சட்டமன்றதேர்தலாக இருந்தாலும் வாக்களிக்க மாட்டார்கள் என்பதற்கு நீங்கள் கடந்த காலங்களில் ஆண்ட பொழுது தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளுக்கு ஊறு பங்கம் வருகின்ற பொழுது அதை காப்பாற்றி கொண்டுவரக்கூடிய இடத்தில், ஆளுகிற இடத்தில் இருந்த பொழுது ஜீவாதார உரிமைகளை காப்பாற்ற வில்லை என்றார்.