திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலக்குண்டில் உள்ள சென்றாயப் பெருமாள் கோவிலில் நேற்று இரவு 9.45 மணி அளவில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார்.
அவருடன் அவரது மகனும், தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிந்திரநாத் உடன் வந்திருந்தார். கோவிலின் கருவறை முன்பு தரையில் அமர்ந்து சாமி தரிசனம் செய்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பின்பு கோவிலில் வழங்கப்பட்ட மரியாதையை ஏற்றுக்கொண்டார். கோவிலில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை கேட்டறிந்த அவர், பின்பு தேனி செல்ல புறப்பட்டும் வேளையில் அங்கே நின்று கொண்டிருந்த பக்தர் ஒருவர் திடீரென்று அருள் வந்தவர் போல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்பு நின்று ''நல்ல வார்த்தை சொல்ல வந்திருக்கிறேன். கட்சிக்கும் ஆட்சிக்கும் ஒரு நல்ல வார்த்தை சொல்வதற்கு எனக்கு அனுமதி வேண்டும். அனுமதி கொடுத்தால் மட்டுமே சொல்வேன்'' என கூறினார்.
அதனை அமைதியாக கேட்டுக் கொண்ட துணைமுதல்வர் வீட்டுக்கு வாருங்கள் என்று அழைத்துவிட்டு தேனி புறப்பட்டுச் சென்றார். அதிமுகவில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவிவரும் வேளையில் சாமி கும்பிட வந்த இடத்தில் உங்களுக்கு ஒரு நல்ல வார்த்தை சொல்ல வந்திருக்கிறேன் என அருளாசி கிடைத்தது வந்திருந்த ஓ.பி.எஸ் ஆதரவாளர்களை மிகுந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.
முன்னதாக திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகள் கோவிலில் வைத்து துணை முதல்வரை சந்திக்க இருப்பதாக பரபரப்பு நிலவி வந்த நிலையில் வத்தலக்குண்டு ஒன்றியச் செயலாளர்கள் பாண்டியன், மோகன் ஆகியோர் மட்டுமே துணை முதல்வரை வரவேற்று வழியனுப்பி வைத்தனர்.