திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று (11/12/2022) நடந்தது. இதில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டனர். மதுரையிலிருந்து திண்டுக்கல் வந்த பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
நிகழ்ச்சி முடிந்ததும் மதுரை விமான நிலையத்தில் பிரதமரை வழியனுப்பி வைப்பதற்காக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அருகருகே நின்றனர். இருவரும் அருகருகே நின்றுகொண்டு பிரதமரை வழியனுப்பி வைக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. அதே நேரத்தில் அரசியல் தளத்தில் பெரிதும் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் பிரதமரைச் சந்தித்தது குறித்தும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி குறித்தும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறியதாவது “பிரதமர் மதுரைக்கு வந்த பொழுது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரைச் சந்திப்பதற்காகப் பிரதமரிடம் அனுமதி கேட்டார். பிரதமர் மோடி அனுமதி கொடுத்ததும் பார்த்தார்கள். அதே போல் தான் ஓ.பன்னீர்செல்வம் அனுமதி கேட்டார். பிரதமர் அனுமதி கொடுத்ததும் பார்த்தார். இருவரும் பார்க்க வேண்டும் என்று அனுமதி கடிதம் கொடுத்தார்கள். அதனால் பிரதமர் பார்த்தார். அன்புடன் பேசினார்.
பாஜகவை பொறுத்தவரை எங்கள் நிலைப்பாட்டில் எந்தவித குழப்பமும் இல்லை. நாங்கள் ஒரு கட்சியுடன்தான் கூட்டணி வைக்கின்றோம். இதில் தொண்டர்கள்தான் தங்கள் தலைவர் யார் என்று முடிவெடுக்க வேண்டும். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களோடு தான் பாஜக கூட்டணி வைக்கும்.
இந்தக் கூட்டணியில் பாஜகவை பொறுத்தவரை பாராளுமன்ற குழு முடிவெடுக்கும். இதில் மாநிலத் தலைவராக என் விருப்பு வெறுப்புகளைச் சொல்வதற்கு எவ்வித அதிகாரமும் இல்லை” எனக் கூறினார்.