கேள்விகேட்ட சலவைத் தொழிலாளரை, காலில் விழுந்து மன்னிப்பு கேட்கச் சொன்ன சம்பவம் திருநெல்வேலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை டவுண் பாட்டபத்து பகுதியில் சலவைத் தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். இதனால், இவர்கள் தங்களின் சமுதாய நன்மைக்காக, ஊர் கமிட்டியை உருவாக்கி, சுமார் 150 குடும்பத்தினர் சேர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இதேபகுதியில் வசிக்கும் பேச்சிராஜன், சி.பி.ஐ.எம்.எல் கட்சியில் மாநில குழு உறுப்பினராக உள்ளார்.
இந்த நிலையில், கணேசன் என்பவர், கமிட்டிக்கு உட்பட்ட சமுதாய மக்களிடம், ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இந்த ஏலச்சீட்டில், பண மோசடி நடந்துள்ளதாக பேச்சிராஜன் புகார் தெரிவித்துள்ளார். இது கணேசனுக்கும் பேச்சிராஜனுக்கும் இடையே உரசலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அப்பகுதியில் நடந்த கொடைவிழா ஒன்றில், பேச்சிராஜன் குடும்பத்தினர் வரி செலுத்த மறுத்துள்ளனர். இதனால், இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் நிகழ்ந்ததாகவும் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், கேள்விகேட்ட பேச்சிராஜன், 'ஊர்மக்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்' எனவும், இல்லையென்றால் 'ஊரைவிட்டு விலக்கி வைக்கப் படுவார்' எனவும் கூறப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், கடந்த மே 13ம் தேதி அன்று பேச்சிராஜனுக்கு திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்திற்கு ஊர் கமிட்டி சார்பாக யாரும் செல்லக்கூடாது என கூறப்பட்டுள்ளது. மீறி திருமணத்தில் கலந்து கொண்ட 50 குடும்பத்தினரையும் ஊரில் இருந்து விலக்கி வைத்ததாக சொல்லப்படுகிறது. "பேச்சிராஜன் குடும்பத்தினர், ஊர் கமிட்டியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.. அதுவரை ஊர் விலக்கத்தை வாபஸ் பெற முடியாது" எனத் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், ஊர் கமிட்டியின் நிலைப்பாட்டை ஏற்று ஊர்க் கூட்டம் நடைபெற்றபோது, ஒரு சிலர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட வீடியோ காட்சிகளும் வெளியாகின. ஆனால், பேச்சிராஜனும் அவர் தரப்பினரும் ஆதிக்கத்திற்கு அடிபணியவில்லை. இதற்கிடையில், பேச்சிராஜன் தரப்பினர், போலீசில் புகார் அளித்துள்ளனர். அப்போது, "ஏலே.. அவுங்க காலுல விழுந்து மன்னிப்பு கேட்டா உனக்கு என்ன பிரச்னை" என்று ஒரு தரப்புக்கு மட்டும் ஆதரவாக போலீஸ் செயல்பட்டதாகவும், விசாரணை என்ற பெயரில் அழைத்து கட்டப்பஞ்சாயத்து செய்ததாகவும் கூறி, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.