பாஜக ஆட்சியில் வணிகர்கள் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக வணிகர் சங்க பேரமைப்புத் தலைவர் விக்ரமராஜா கூறினார்.
சேலம் லீ பஜார் வர்த்தக சங்கத்தின் நூற்றாண்டு விழா புதன்கிழமை (பிப்ரவரி 6, 2019) நடந்தது. இதில் பங்கேற்ற வணிகர் சங்க பேரமைப்புத் தலைவர் விக்ரமராஜா, செய்தியாளர்களிடம் கூறியது:
வணிகர்கள் 18 சதவீதம், 28 சதவீத ஜிஎஸ்டி வரி விகிதங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 12 மாவட்டங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட உள்ளன. மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட நிதிநிலை அறிக்கையில் வர்த்தகர்கள் முன்வைத்த பல கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு உள்ளன.
தமிழக அரசு தாக்கல் செய்ய உள்ள நிதிநிலை அறிக்கையிலாவது, உணவுப்பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும். மேலும், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதமாக உள்ள ஜிஎஸ்டி வரிகளை கண்டிப்பாக குறைக்க வேண்டும்.
வணிகர்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆனால் பாஜக அரசு வணிகர்கள் நலனை புறக்கணித்து விட்டது. வணிகர்களின் கோரிக்கைகளை ஆதரிக்கும் கட்சிக்கே வரும் தேர்தலில் ஆதரவு அளிப்போம்.