கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற உறுப்பினர்களின் அவசர கூட்டம் நேற்று நடைபெற்றது. தி.மு.கவை சேர்ந்த நகரமன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் தலைமையில், ஆணையாளர் சேகர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 33 வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டம் ஆரம்பித்தவுடன், வார்டு வாரியாக நகர மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைக்கும் போது யாரும் குறிக்கீடு செய்ய வேண்டாம் என தலைவர் சங்கவி வேண்டுகோள் விடுத்தார். 73 தீர்மானங்கள் நகரமன்ற கூட்டத்தில் மன்ற பொருள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வார்டு உறுப்பினர்களும் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை எடுத்துரைத்து வந்தனர். அ.தி.மு.க நகர்மன்ற உறுப்பினர் சந்திரகுமார் பேசும்போது, சில தீர்மானங்களில் உள்ள பொருள்கள் குறித்து தனது ஆட்சேபனையான கருத்துக்களை தெரிவித்தார். அப்போது தி.மு.க நகரமன்ற உறுப்பினர் ஒருவர் குறிக்கிட்டு பேச முற்பட்டபோது, அதற்கு அ.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு தி.மு.க உறுப்பினர்கள் தீர்மானங்கள் குறித்து எதுவும் பேச வேண்டாம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பு உறுப்பினர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஒரு கட்டத்தில் தலைவர் சங்கவி, மன்றத்தில் வைக்கப்பட்டுள்ள 73 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு விட்டது. என கூறினார்.
அதையடுத்து தி.மு.க, த.வா.க உறுப்பினர்கள் அனைவரும் மன்றத்திலிருந்து வெளியேறினர். ஆனால் அ.தி.மு.க(6), பா.ம.க(3), தே.மு.தி.க(1) உறுப்பினர்கள் கூட்டத்தை விட்டு வெளியேறாமல் தொடர்ந்து கூட்டம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். அதனைத் தொடர்ந்து 33 உறுப்பினர்களில் 23 பேர் வெளியேற, 10 உறுப்பினர்களுடன் கூட்டம் நடைபெற்றது.
இதனிடையே கீழே சென்ற தி.மு.க உறுப்பினர்கள் நகர்மன்றத் தலைவர் கீழே வர வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது நகர் மன்றத்தில் பா.ம.க உறுப்பினர் சிங்காரவேல் விருத்தாச்சலம் தொகுதி, சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் இல்லாதது போல் அனாதை தொகுதியாக மாறிவிட்டதாகவும், திருடர்களின் கூடாரமாக விருத்தாச்சலம் நகரம் உள்ளதாகவும் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென நகர மன்ற தலைவர் சங்கவி, துணைத் தலைவர் ராணி, நகராட்சி ஆணையாளர் சேகர் ஆகிய மூவரும் மன்றத்தை விட்டு வெளியே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த பா.ம.க, அதிமுக உறுப்பினர்கள் மன்ற விதிமுறைகளை மீறி நகர மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையர் அவமதிப்பு செய்து விட்டதாக குற்றம் சாட்டி முழக்கங்கள் எழுப்பியவாறு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 15 நிமிடம் கழித்து மீண்டும் நகர மன்ற தலைவர் சங்கவி மற்றும் நகராட்சி ஆணையர் மன்றத்திற்கு வந்தனர். “நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது மன்றத்தை விட்டு ஏன் வெளியே சென்றீர்கள்?” என அ.தி.மு.க, பா.ம.க உறுப்பினர்கள் வாக்குவாதம் செய்தனர். பின்பு பா.ம.க நகர மன்ற உறுப்பினர்கள் வைத்த கோரிக்கைகளை கேட்ட பின்பு கூட்டம் முடிவடைந்தது.
ஆளும் கட்சி நகர்மன்றத் தலைவர் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கும் போதே ஆளும் தி.மு.க கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் வெளியேறியதும் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே தலைவர் மற்றும் ஆணையாளர் வெளியே சென்றதாலும் பரபரப்பு ஏற்பட்டது.