2021- 2022 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். முதல்முறையாக (காகிதமற்ற) டிஜிட்டல் பட்ஜெட்டை 'டேப்லட்' மூலம் தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டை தாக்கல் செய்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "முன்னெப்போதும் இல்லாத சூழலில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன். பொது முடக்கத்தால் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பொது முடக்கம் அமல்படுத்தப்படாவிட்டால் நாம் பெரும் சேதத்தைச் சந்திக்க நேர்ந்திருக்கும். கரோனாவுக்கு எதிராக இந்தியா மட்டுமே இரண்டு தடுப்பூசிகளை விரைவாகக் கொண்டு வந்துள்ளது. கரோனா காலத்தில் பணியாற்றிய முன்களப் பணியாளர்களுக்கு நன்றி" எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மத்திய அரசின் இந்த பட்ஜெட்டை விசிக தலைவர் திருமாவளவன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள அவர், "முதல்முறையாக 'காகிதமில்லா' பட்ஜெட். வழக்கம்போல மக்களுக்கு 'பயனில்லா' பட்ஜெட். இது நாட்டு 'வளர்ச்சிக்கானது' அல்ல; மோடி நண்பர்களுக்கு நாட்டை 'விற்பதற்கானது'. எல்ஐசி, பாரத் பெட்ரோலியம் துறைமுகங்கள், ஏர்இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களையும் நிலங்களையும் விற்கப்போகும் பட்ஜெட்" என்று தெரிவித்துள்ளார்.