கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், கரோனா பாதிப்பு குறைந்துள்ள 27 மாவட்டங்களில், டாஸ்மாக் கடைகளை 35 நாட்களுக்குப் பிறகு இன்று (14.06.2021) கட்டுப்பாடுகளுடன் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருந்தது. 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு குறைவான அதே 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளைத் திறக்க அரசு அனுமதி அளித்திருந்தது. காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை தேநீர் கடைகளில் பார்சல் மட்டும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெகிழிப் பைகளில் தேநீர் பெறுவதைத் தவிர்க்குமாறும் மக்களுக்கு அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
அதேபோல், இனிப்பு கார வகைகள் விற்கும் கடைகள் 8 மணிமுதல் மதியம் 2 மணிவரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி இ-சேவை மையங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கட்டுமான நிறுவன அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம் எனவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நோய்த் தொற்று அதிகம் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த தளர்வுகள் பொருந்தாது. மற்ற 27 மாவட்டங்களுக்கு மட்டுமே இந்த தளர்வுகள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி கரோனா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் மட்டும் தேநீர் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.