சாலை விதிகளை மீறிய குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள், ஆன்லைனில் அபராதம் செலுத்தாமல் ஏமாற்றி வந்த நிலையில், தற்போது அவர்களை கண்காணிக்க சிறப்பு மையம் சேலம் நகர காவல் நிலையத்தில் திறக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகரில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, அதிவேகமாக, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, வாகனத்தில் செல்லும்போது அலைப்பேசியில் பேசிக்கொண்டே செல்வது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறி செயல்படுவோர் மீது காவல்துறையினர் அபராதம் விதிக்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உடனடி அபராதம் (ஸ்பாட் ஃபைன்) வசூலிக்கும் திட்டத்தில் மோசடி நடந்தது. இதையடுத்து, ஆன்லைன் மூலமாக அபராதம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. ஹெல்மெட் அணியாமல் சென்றால் அபராதம் எவ்வளவு என்பதற்கான ரசீது கொடுக்கப்பட்டுவிடும். அதில் குறிப்பிட்டுள்ள தொகையை வாகன ஓட்டிகள் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். இந்த முறையிலும் ஏராளமான வாகன ஓட்டிகள் அபராதம் செலுத்தாமல் காவல்துறையை ஏமாற்றி வருகின்றனர். சாலை விதிகளை மீறிய வகையில் மட்டும் லட்சத்திற்கு மேற்பட்டோரிடம் இருந்து அபராதத் தொகை வசூலிக்கப்படாமல் உள்ளது. இந்த நடைமுறைச் சிக்கலை போக்கும் வகையில் தற்போது, சேலம் நகர காவல் நிலையத்தில், 'மோட்டார் வாகன வழக்கு ஆன்லைன் பேமென்ட் கண்காணிப்பு மையம்' புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மையத்திற்கென நான்கு பெண் காவலர்கள் முழு நேரப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் தினமும் 1000 வாகன ஓட்டிகளை அலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு அபராத நிலுவையை வசூலிப்பார்கள். சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகள் வழக்கம்போல் ஆன்லைன் மூலம் தொகையை செலுத்தலாம் அல்லது நகர காவல் நிலையத்தில் உள்ள மையத்திற்கு வந்தும் அபராதத் தொகையை செலுத்திவிட்டுச் செல்லலாம். இவ்வாறு காவல்துறையினர் கூறினர்.