Skip to main content

ஓபிஎஸ் உள்பட அமைச்சர்கள் திறந்து வைத்து 58 கிராம பாசனக் கால்வாயில்  உடைப்பு!

Published on 23/08/2018 | Edited on 23/08/2018
o

 

 ஐம்பது ஆண்டுகளுக்கு  மேலாக போராடி பெற்ற 58 கிராம பாசனக் கால்வாயில்  சோதனை ஓட்டத்திற்காக வைகை அணியை ஓபிஎஸ்  உள்பட அமைச்சர்கள் திறந்து வைத்த மறு நாளே  கால்வாய் திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளதை கண்டு  அதிகாரிகள் சரி செய்யும் பணியில் இறங்கியுள்ளனர்.

 
மதுரை மாவட்டத்தில்  உள்ள  உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த 58 கிராம மக்கள் தங்கள் பகுதிக்கு வைகை அணை தண்ணீர் வேண்டும் என்ற கோரிக்கையோடு போராட்டக்களத்தில் இறங்கினர்.

 

o


 இந்த  போராட்டத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். வைகை அணை நிறையும் போது வெளியேற்றப்படும் உபரி நீரை மட்டும் எங்களுக்கு கொடுங்கள் என்று கோரிக்கை வைத்தனர் கிராமத்தினர். அதன் அடிப்படையில் கடந்த 1996 ம் ஆண்டு கால்வாய் மூலமாக தண்ணீர் கொண்டுவரும் திட்டத்திற்கான அரசு ஒப்புதல் வழங்கியது. தொடர்ந்து 1999ம் ஆண்டு கால்வாய் அமைக்கும் பணியும் துவங்கப்பட்டது. 58 கிராமங்கள் இணைந்து போராடி வென்றதால், இத்திட்டத்திற்கு 58 கிராம பாசனக் கால்வாய் என்றே பெயரிடப்பட்டது. அதன் பின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  நிலக்கோட்டை வட்டார கிராமங்களும் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தான் ஆண்டிபட்டியில் உள்ள வைகை அணையின் வலதுபுறக் கரைப் பகுதியில் உள்ள 58 கிராம பாசனக் கால்வாய் மதகில் இருந்து 27.735 கிலோ மீட்டர் தூரம் பிரதானக் கால்வாய் அமைந்துள்ளது. அதனைத்தொடர்ந்து, உத்தப்ப நாயக்கனூரில் இரு கால்வாய்களாக பிரித்து 11.925 கிலோமீட்டர் தூரம் இடப்பக்கமும், 10.24 கிலோமீட்டர் தூரம் வலப்பக்கமும் கால்வாய் அமைந்துள்ளது. கால்வாய் செல்லும் வழியில், மலைப்பகுதி மற்றும் காட்டுப்பகுதி இடையில் உள்ளதால், 3 தொட்டிபாலங்கள் கட்டப்பட்டுள்ளது. 18 ஆண்டுகள் நீடித்த கால்வாய் அமைக்கும் பணியானது முடிவடைந்து, நேற்று துணைமுதல்வர் ஓ.பி.எஸ். சோதனை ஓட்டமாக வைகை அணையில் உள்ள கால்வாய் மதகை திறந்துவைத்து வைத்தார். உடன் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன்.  செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார்ருடன்  மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட கலெக்டர்கள் உள்பட அதிகாரிகளும் பலர் கலந்து கொண்டனர்.

 

o


          இந்நிலையில் தான்  இரவு திடீரென  கால்வாயில் உடைப்பு  ஏற்பட்டது.  இது சம்மந்தமாக வைகை அணை கோட்ட பொறியாளர் செல்வத்திடம்  கேட்டபோது ... அணைக்கரைப்பட்டியை அடுத்த புதூர் என்ற இடத்தில் தான் கால்வாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. உடைப்பு ஏற்பட்டதாக  இரவு 11 மணிக்கு தகவல் கிடைத்தது. உடனே, வைகை அணையில் உள்ள கால்வாய் மதகு மூடப்பட்டது. உடைப்பை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் இறங்கியுள்ளதால் கூடிய விரவில் கால்வாய் சீர்அமைக்கப்படும் என்று  கூறினார். ஆனால்  அப்பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத நிலையில் தான்  இருந்து வருகிறார்கள். 

சார்ந்த செய்திகள்