கரோனா தொற்று நோய்த்தடுப்பு நடவடிக்கையாக சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம், தற்காலிக பழைய பேருந்து நிலைய வளாகங்களில் கரோனா தொற்று நோய்த்தடுப்பு உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு மற்றும் நோய்த்தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மாநகராட்சி ஆணையர் சதீஸ் தெரிவித்துள்ளார்.
சேலம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தொற்று நோய்த்தடுப்பு உதவி மையத்தின் செயல்பாடுகளைத் துவக்கி வைத்த பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.
இதுகுறித்து ஆணையர் சதீஸ் மேலும் கூறியது: சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று நோய் அறிகுறிகள் மற்றும் நோய் பரவும் விதத்தைக் கண்டறிந்து, அவற்றில் இருந்து காத்துக் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜுன் 1ஆம் தேதி முதல், தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை மேலும் தளர்த்தி, பொதுப் போக்குவரத்திற்கு அனுமதி அளித்துள்ளது. அதைத் தொடர்ந்து கரோனா தொற்று நோய்த்தடுப்பு நடவடிக்கையாக பேருந்து நிலையங்களில் தீவிர தொற்று நோய்த்தடுப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள அரசு வலியுறுத்தி உள்ளது.
அதன்படி, சேலம் புதிய பேருந்து நிலையம் மற்றும் தற்காலிக பழைய பேருந்து நிலைய வளாகங்களில் கரோனா நோய்த்தடுப்பு உதவி மையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. பேருந்து நிலையங்களுக்குள் வரும் பொதுமக்கள் கைகளைச் சுத்தமாக கழுவிடும் வகையில் பேருந்து நிலைய வளாகத்தில் நுழைவாயில்கள் உள்ளிட்ட 3 இடங்களில் கைகள் கழுவுவதற்கான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. கைகளைச் சுத்தம் செய்வதற்கான கை சுத்திகரிப்பான்கள் வைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் கைகளை கழுவிய பிறகு, அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் மாநகராட்சி பணியாளர்களால் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து, பரிசோதனையின் அடிப்படையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.
நோய்த்தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேல் சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்களில் காய்ச்சல், தொற்று தொடர்பான ஆலோசனைகள் தேவைப்படுவோர், இந்த உதவி மையங்களை அணுகினால் உரிய ஆலோசனைகளை வழங்க மருத்துவக் குழுவினர் அமர்த்தப்பட்டு உள்ளனர்.
பேருந்து நிலையங்களுக்குள் வரும் அனைவருக்கும் கரோனா நோய்த்தொற்று அறிகுறிகள் மற்றும் பரவும் விதத்தைக் கண்டறிந்து, தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்படும். பேருந்து வளாகங்களைச் சுத்தமாக வைத்திருத்தல், சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல, பேருந்துகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்ட பிறகே, பயணிகள் ஏறி அமர அனுமதிக்கப்படுகின்றனர். பேருந்துகளில் இருக்கைகள், இரும்புக் கம்பிகள், கைப்பிடிகள், படிக்கட்டுகள் ஆகியவற்றில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இவ்வாறு ஆணையர் சதீஸ் கூறினார்.
முன்னதாக, பேருந்துகளில் மேற்கொள்ளப்படும் கிருமி நாசினி தெளிப்புப் பணிகளை ஆணையர் சதீஸ் நேரில் ஆய்வு செய்தார்.