சேலம் வருகை தந்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்தார். 1,713 சதுர அடி பரப்பில் 16 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சிலையை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி இச்சிலை திறக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து சேலம் நகர பேருந்து நிலையத்தில் 96 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் தற்போது திறந்து வைத்துள்ளார். இந்த பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் 2019-20 ஆகிய ஆண்டுகளில் கரோனா காரணமாக கட்டுமான பணிகள் தடைபட்டிருந்தன. தொடர்ச்சியாக அந்த பணிகள் நடைபெற்று தற்போது பணிகள் முடிந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கொண்டுவரப்பட்ட இந்த ஈரடுக்கு பேருந்து நிலையமானது தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் புனரமைக்கப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மைதானம், நேரு கலையரங்கத்தையும் தமிழக முதல்வர் திறந்து வைத்துள்ளார்.