'என்னை முதல்வராக நியமனம் செய்த ஜெயலலிதாவும் சசிகலாவும் கேட்டார்கள் கொடுத்துவிட்டேன். ஆனால் பழனிசாமி, உன்னை யாரு முதலமைச்சராக நியமனம் செய்தது?' என ஓபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேனியில் நடைபெற்ற அமமுக கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓபிஎஸ் உரையாற்றினார். அவர் பேசுகையில், ''நம்முடைய இயக்கத்தை கபளீகரம் செய்திருக்கின்ற எடப்பாடி பழனிசாமி என்ன செய்வீர்கள் நல்ல சத்தம் போட்டு சொல்லுங்கள். இன்னும் நன்றாக சொல்லுங்கள். இன்றைக்கு உங்களுடைய எழுச்சி பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. இவ்வளவு பெரிய கூட்டத்தை எம்ஜிஆர் இருந்த காலத்திலும், அவருக்குப் பிறகு ஜெயலலிதா இருந்த காலத்தில் தான் பார்த்திருக்கிறோம். இப்பொழுது அதே கூட்டத்தை ஒருங்கிணைந்து பார்க்கின்ற பொழுது இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.
அந்த தொண்டர்களை ஒருங்கிணைத்து அழைத்து வந்திருக்கின்ற நிர்வாகத்தில் இருக்கக்கூடிய பொறுப்பாளர்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய நன்றியும் வணக்கத்தையும் கூட்டத்தின் மூலமாக தெரிவித்துக் கொள்கிறேன். 1972ல் எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கியபோது, கழகம் எந்த வழியில் தர்மத்தின் வழியில் நடக்க வேண்டும்; நீதியின் வழியில் நடக்க வேண்டும்; தொண்டர்கள் தான் அதிமுகவின் அடிநாதம் கவசம் என்று சொல்லி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு பல சட்ட விதிகளை எம்.ஜி.ஆர் வகுத்து தந்தார்.
அவர் வகுத்த சட்ட விதிகளின்படி தான் ஜெயலலிதாவும் 50 ஆண்டுகாலம் இந்த இயக்கத்தை யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக உருவாக்கி நம் கையில் தந்தார்கள். ஆனால் ஒரே ஒரு விதியை மட்டும் எந்த காலத்திலும் மாறுதல் செய்யவோ அல்லது திருத்தம் செய்யவோ கூடாது என்று எம்ஜிஆர் அந்த சட்டவிதியில் சேர்த்து இருந்தார். ஆனால் இன்றைக்கு போலி பொதுச் செயலாளராக பழனிசாமி என்ற ஒரு நபர் அதிமுகவை எப்படி கபளீகரம் செய்தார் என்று உங்களுக்கு தெரியும்.
ஜெயலலிதா என்னை இரண்டு முறை முதலமைச்சராக நியமனம் செய்தார். மூன்றாம் முறையாக சசிகலா தான் என்னை முதலமைச்சராக நியமனம் செய்தார். என்னை நியமனம் செய்த ஜெயலலிதாவும் சசிகலாவும் கேட்டார்கள் கொடுத்துவிட்டேன். ஆனால் பழனிசாமி, உன்னை யாரு முதலமைச்சராக நியமனம் செய்தது? அவரே ஒரு விஷயத்தை ஒத்துக் கொண்டார். அவர் பல தியாகங்கள் செய்து படிப்படியாக நடந்து வந்து ஊர்ந்து ஊர்ந்து போய் நான் முதலமைச்சராக பதவியேற்றேன் என்று சொன்னார். உண்மையிலேயே பழனிசாமி ஊர்ந்து ஊர்ந்து தான் சசிகலா காலில் விழுந்து தான் பதவியைப் பெற்றார் என்பதுதான் நாடறிந்த உண்மை'' என்றார்.