என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் மேல்வளையமாதேவி கிராமத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு கால்வாய் வெட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை 20க்கும் மேற்பட்ட ராட்சத மண் வெட்டும் வாகனங்கள் மூலம் அழித்துக் கால்வாய் வெட்டுவதற்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், ''இதில் மிச்சம் 30 ஏக்கர் நிலங்களை நில உரிமையாளர்கள் என்.எல்.சிக்கு கொடுக்காமல் இருக்கக்கூடிய சூழ்நிலையில் என்.எல்.சியினுடைய சுரங்க விரிவாக்க பணிகளுக்கு இந்த பரவனாறு மாற்றுப்பாதை என்பது மிக மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இதைச் செய்தால்தான் சுரங்கத்தில் இருக்கக்கூடிய மற்ற பணிகளைச் செய்ய முடியும். சுரங்கத்தில் உள்ள மற்ற பணிகள் நடைபெற்றால் தான் மின்சார உற்பத்தி பாதிக்காமல் இருக்கும். மின்சார உற்பத்தி பாதிக்காமல் இருந்தால் தான் நமக்கு உரிய மின்சாரம் வழங்கப்படக்கூடிய சூழ்நிலை வரும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட கடலூர் மாவட்டத்தின் நிர்வாகம் மூலம் தொடர்ச்சியாகப் பேசப்பட்டிருக்கிறது.
வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரிடமும் பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று உரிமையாளர்கள் சொல்லி இருக்கக்கூடிய பல்வேறு கோரிக்கைகள் சார்பாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இதனுடைய அடிப்படையில் பார்த்தால் 2006 முதல் 2013 வரை கையகப்படுத்தப்பட்டு இருக்கக்கூடிய 104 ஹெக்டேர் பரப்பளவிற்குள் வரக்கூடிய 382 நில உரிமையாளர்களுக்கு ஏற்கனவே ஒரு ஏக்கருக்கு 6 லட்சம் என்று வழங்கப்படக்கூடிய இந்த இழப்பீடு தொகை நீங்கலாக 10 லட்சம் கூடுதலாக கருணைத்தொகை வழங்கப்பட இருக்கிறது. அதே காலகட்டத்தில் 2006ல் இருந்து 2013 வரை கையகப்படுத்தப்பட்டு இருக்கக்கூடிய 83 ஹெக்டேர் பரப்பளவில் வரக்கூடிய 405 நில உரிமையாளர்களுக்கு ஏக்கருக்கு 2.6 லட்சம் என்ற இழப்பீட்டு தொகை நீங்கலாக மேலும் ஒரு 14 லட்சம் கருணைத் தொகையாக வழங்கப்பட இருக்கிறது. அதேபோல் 2000 முதல் 2005 ஆம் ஆண்டு வரை கையகப்படுத்தப்பட்ட 77 ஹெக்டேர் பரப்பளவில் வரும் 31 நில உரிமையாளர்களுக்கு ஏற்கனவே 2.4 லட்சம் இழப்பீடு தொகை வழங்கியது போக ஆறு லட்சம் கருணைத் தொகையாக வழங்கப்பட இருக்கிறது. மொத்தமாக 1088 நில உரிமையாளர்களுக்கு 75 கோடி ரூபாய்க்கு மேலான இழப்பீடு தொகைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பரவனாற்று பாதையில் ஏற்கனவே பயிர் செய்திருக்கும் விவசாயிகளுக்கும் இழப்பீட்டுத் தொகையாக ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் அளவிற்கு என்.எல்.சியிடம் இருந்து நாம் இழப்பீடு தொகை பெறுவோம் என்றும் உறுதி அளித்து இருக்கின்றோம்'' என்றார்.