
சென்னை மதுரவாயல் - வாலாஜா நெடுஞ்சாலையில் உள்ள இரு சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணம் மட்டுமே நீதிமன்ற உத்தரவுப்படி வசூலிக்கப்படுகிறது எனத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை மதுரவாயல் - வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலை முறையாகப் பராமரிக்காதது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நெடுஞ்சாலையைச் சீரமைக்கும் வரை சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணம் மட்டும் வசூலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து இந்த உத்தரவு மீண்டும் நீடிக்கப்பட்டது.
இந்தநிலையில் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வு முன்பு ஆஜரான தேசிய நெடுஞ்சாலைத் துறை வழக்கறிஞர் கார்த்திகேயன், வாலாஜா சாலையில் சாலை சீரமைப்பு பணிகள் முடிந்து விட்டதாகவும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சுங்கச் சாவடிகளில் 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். எனவே இந்த வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து தலைமை நீதிபதி அமர்வு இந்த மாத இறுதியில் இந்த வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர்.