ஆன்லைன் ரம்மி விளையாட்டு மூலம் பலர் பணத்தை இழந்து வருவதோடு தற்கொலை சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதனால் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் அதிகரித்து வருகிறது.
ஆன்லைன் ரம்மி தடை அவசரச் சட்டம் குறித்து சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 18/08/2022 காலை ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர்கள், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, காவல்துறைத் தலைவர் முனைவர் சைலேந்திர பாபு, பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் முதல்வரின் ஆலோசனையை அடுத்து இன்று தற்பொழுது தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் முதல்வரின் தனி செயலாளர் உதயசந்திரன், உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, தமிழக டிஜிபி உள்ளிட்டோர் பங்குபெற்றுள்ளனர்.