‘ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இணையுங்கள்’ என அனைவரது செல்போன்களுக்கும், எஸ்.எம்.எஸ். வந்தபடியே இருக்கிறது. தொலைக்காட்சி விளம்பரங்களும் ரம்மி விளையாட, மக்களை இழுக்கின்றன. பணத்தை இழப்பதால், தற்கொலைகள் நடக்கின்றன. இச்சூதாட்டத்துக்குக் குடும்பங்கள் பலவும் பலியாகி வருகின்றன. காவல்துறையினரையும், ஆன்லைன் ரம்மி விட்டு வைக்கவில்லை.
தமிழ்நாடு சிறப்புக் காவல் (ராஜபாளையம்) 11-ஆம் அணியின் தளவாய், தனது அணியின் அனைத்து நிறும/குழும ஆய்வாளர்களுக்கும், ஆன்லைன் ரம்மி குறித்து எச்சரிக்கும் விதத்தில் சுற்றறிக்கையே அனுப்பியிருக்கிறார். அதில், தங்களது நிறும/குழுமங்களில் பணிபுரியும் அதிகாரிகள்/ஆளிநர்கள் எவரேனும் பணியில் இருக்கும்போது, ஆன்லைன் ரம்மி விளையாடுவதாகத தகவல் தெரிய வந்தால், அவர்கள் குறித்து உடனடியாக அறிக்கை அனுப்ப வேண்டும்.
மேலும், காவல் ஆளிநர்கள் எவரும் ஆன்லைன் ரம்மி விளையாடக் கூடாது. தவறும்பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து, அனைத்து நிறும/குழும ஆய்வாளர்களுக்கும், ஆஜர் அணிவகுப்பில் அறிவுறுத்த வேண்டும். இந்த அறிவுரை தெரிந்து கொள்ளப்பட்டதென, காவல் ஆளிநர்களிடம், கீழ்க்கண்ட அட்டவணையின் பிரகாரம், கையெழுத்து பெற்று, முகாம் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.
காவலர்களே ஆன்லைன் ரம்மியில் பொழுதைக் கழித்துப் பணத்தை இழக்கிறார்கள் என்றால், சாமானியர்கள் எம்மாத்திரம்!