தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல் சரகத்திற்குப்பட்ட சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த காலமான தனிஸ்லாஸ் என்பவரின் மகன் செல்வன். இவர்களின் குடும்பத்திற்கும் அந்தப் பகுதியின் அ.தி.மு.க. புள்ளியான திருமணவேல் என்பவருக்கும் நிலம் தொடர்பான பிரச்சினை இருந்து வந்திருக்கிறது. இது தொடர்பாக செல்வன் அவரது சகோதரன் பீட்டர் ராஜன் ஆகியோர் தட்டார்மடம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்னர். ஆனால் திருமணவேலுக்கு ஆதரவாகச் செயல்பட்ட தட்டார்மடம் காவல் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் புகார் மீது நடவடிக்கை எடுக்க வில்லையாம். மாறாக திருமணவேலின் புகார் மீது நடவடிக்கை எடுத்த இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் செல்வன் மற்றும் சகோரர்கள் மீது குற்ற எண் 177+ 179/2020படி வழக்குப் பதிவு செய்து கைது செய்தவர் அடித்துத் தாக்கி அவர்களைச் சிறையிலும் அடைத்திருக்கிறார்.
இதனிடையே லாரி மூலம் தண்ணீர் விற்பனை செய்து வரும் செல்வனை மூன்று முறை திருமணவேலின் தரப்புகள் தாக்கியதாகத் தெரிகிறது. அதனைப் புகார் செய்த செல்வத்தின் புகார் மீது இன்ஸ்பெக்டர் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதையடுத்தே தனது புகார் மனு மீது நடவடிக்கை மேற்கொள்ளாத இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் மீது நடவடிக்கைக்காக மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருக்கிறார் செல்வம். அந்த மனு மீதான பதிலளிக்கும்படி நேற்றைய தினமான 16.09.2020க்கு அன்று இன்ஸ்பெக்டருக்கு தாக்கீது வந்திருக்கிறது. இதனால் ஆத்திரமாகியிருக்கிறார் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன்.
இந்த நிலையில் நேற்று மதியம் சாத்தான்குளத்திற்கு ஒரு வேலையாகச் சென்று விட்டு தனது பைக்கில் திரும்பியிருக்கிறார் செல்வம். அவர் கொழுந்தட்டு விலக்கு பக்கம் வரும் சமயம் இன்னோவா கார் TN.69.K.8957ல் வந்த மர்ம நபர்கள் சிலர் செல்வத்தை வழி மறித்துக் கடத்திச் சென்றவர்கள் உருட்டுக் கட்டைகளால் கடுமையாக செல்வத்தைத் தாக்கியதாகத் தெரிகிறது. குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்த செல்வத்தை அந்த கும்பல் கடக்குளம் பகுதியில் போட்டு விட்டுச் சென்றுள்ளனர்.
செல்வம் துடிப்பதைப் பார்த்த சிலர் அவரைக் சிகிச்சைக்காக திசையன்விளை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுப் வழியில் அவரது உயிர் பிரிந்திருக்கிறது. சம்பவ இடத்தைப் பார்வையிட்ட எஸ்.பி.ஜெயக்குமார் விசாரணை மேற் கொண்டிருக்கிறார்.
நடந்தவைகளை எல்லாம் தன் புகாரில் தெரிவித்த செல்வத்தின் தாய் எலிசபெத், திருமணவேல் அவருக்கு ஆதரவாரச் செயல்பட்ட இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் தான் தன் மகன் கொலை செய்யப்பட்டதைக் குறிப்பிட்டு திசையன்விளை காவல் நிலையத்தில் பகார் செய்திருக்கிறார்.
அவர்கள் கொடுத்த புகாரின் படி திருமணவேல், மற்றும் இன்ஸ்பெக்டர் மீது எப்.ஐ.ஆர். ஆகியுள்ளது. அடுத்து விசாரணைக்குப் பின்பு நடவடிக்கை என்று நம்மிடம் தெரிவித்தார் நெல்லை சரக டி.ஐ.ஜி.யான பிரவீன்குமார்.
மேலும் இந்தக் கடத்தல் கொலை சம்பவத்தில் கூலிப்படையின் செயல்பாடுகளிருப்பதாகச் சந்தேகித்த போலீஸ் விசாரணை, அதன் ரூட்டிலும் செல்கிறது. முதலில் சாத்தான்குளம் போலீஸ் டார்ச்சர் அடுத்த தொற்றாக பக்கம் உள்ள தட்டார் மடம் டார்ச்சர் அம்பலமேறியுள்ளது.
திசையன்விளை காவல் நிலையத்தின் முன்பு திருமணவேல், இன்ஸ் ஹரிகிருஷணன் இருவரையம் கைது செய்யும்படி செல்வம் மனைவி செல்வ ஜீவிதா மற்றும் நாம் தமிழ்ர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.