ஆன்லைன் மோசடியில் அதிக பணத்தை இழப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவர பட்டியலில், 2016-17ம் ஆண்டு முதல் 2018-19ம் ஆண்டு வரை அதிகபட்சமாக தமிழகத்தில் 56 கோடி ரூபாய் ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும்,46 கோடி ரூபாய் இழப்புடன் மகாராஷ்டிரா 2வது இடத்திலும், 31 கோடி ரூபாய் பறிகொடுத்து ஹரியானா 3வது இடத்திலும் உள்ளது.
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 644 ஆன்லைன் மோசடிகள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக தொழில் நுட்பத்தை அறியாத, 70 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களிடமே அதிகளவு ஆன்லைன் மோசடிகள் நடைபெற்றுள்ளன. தமிழக காவல்துறை மற்றும் சைபர் க்ரைம் பிரிவு, ஆன்லைன் மோசடி குறித்து அதிக விழிப்புணர்வுடன் இருப்பதால் அதிகளவு புள்ளிவிவரங்கள் கிடைத்துள்ளதாகவும் மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது.