திருச்சி திருவெறும்பூரில் காவலர் காமராஜின் செயல்பாட்டை கண்டித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருச்சி திருவெறும்பூர் கணேஷா ரவுண்டானா பகுதியில் இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணியாமல் வந்த தம்பதி ராஜா மற்றும் உஷா அவர்களை காவல் துறையினர் கையை காட்டி நிறுத்தியுள்ளனர். அவர் நிற்காமல் சென்றதால், காவலர் காமராஜ் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்று அந்த தம்பதி சென்ற இரு சக்கர வாகனத்தை எட்டி உதைத்துள்ளார், நிலைதடுமாறி அதனால் சம்பவ இடத்திலேயே உஷா உயிரிழந்துள்ளார்.
இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். மக்களை காக்கவேண்டிய காவல்துறை தமிழக அரசின் ஏவல்துறையாக செயல்படுவது வேதனையாகவுள்ளது. ஒருபுறம் மன உளைச்சலால் காவலர்கள் தங்களை, தாங்களே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொள்ளும் நிலையும் தமிழ்நாட்டில் பார்க்கமுடிகிறது. அதேபோல் அராஜகத்தில் ஈடுபடும் காவல்துறையினரையும் இதே தமிழ்நாட்டில் தான் பார்க்கமுடிகிறது. இந்த குறைபாடுகள் எப்படி வருகிறது என்றால் ஆட்சி நிர்வாகம் சரியில்லாததன் வெளிப்பாடாகவே பார்க்கவேண்டியுள்ளது.
மேலும் காவல்துறையினர் மாதத்திற்கு சுமார் 1 கோடிக்கு மேல் மக்களிடத்தில் வசூல் செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் மக்கள் பேசிக்கொள்கிறார்கள். வசூலிப்பதையும், ஊழல் செய்வதையுமே குறிக்கோளாக வைக்காமல், மக்களுக்கு சேவைசெய்யும் காவல்துறையாக இருக்கவேண்டும். உயிரழந்த அப்பாவி கர்ப்பிணி பெண் குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதி வழங்கவேண்டும், எதிர்காலத்தில் இதுபோன்று சம்பவம் நடக்காத வண்ணம் நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும். மக்களை காக்கவேண்டிய காவல்துறை, மக்களை காவுவாங்கும் துறையாக இல்லாமல், சேவை செய்யும் காவல்துறையாக இருக்கவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.