கடந்த 10 ஆம் தேதி (10-11-2020) பெரம்பலூர் பகுதியில் உள்ள இரூர் கூத்தனூர் சாலை, சத்திரமனை பகுதியில் 2 டன் வெங்காயத்தை கோழிப் பண்ணையில் பதுக்கி வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர், உணவுப் பாதுகாப்பு மற்றும் பதுக்கல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து வெங்காய மூட்டைகளைப் பறிமுதல் செய்தனர்.
தீபாவளிப் பண்டிகையையொட்டி, இந்தப் பதுக்கல் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இதற்கு உரிமையாளர்கள் யார் என்று விசாரிக்கையில், திருச்சி காந்தி மார்கெட் பகுதியில் வெங்காய மண்டி நடத்திவரும், தந்தை மகன் இருவரும்தான் பெரம்பலூரில் பறிமுதல் செய்யபட்ட வெங்காயத்திற்குச் சொந்தகாரர்கள் என்று திருச்சி வெங்காய மண்டி பகுதியில் பேசப்பட்டுவருகிறது.
காந்தி மார்கெட் பகுதியில் இயங்கி வந்த வெங்காய மண்டியை, மாவட்ட நிர்வாகம் பால் பண்ணை பகுதிக்கு இடமாற்றம் செய்த நிலையில், அந்த பதுக்கல்காரரின் ஆதரவாளர்களான 50 க்கும் மேற்பட்ட வெங்காய வியாபாரிகள் காந்தி மார்கெட் பகுதியிலேயே, தொடர்ந்து தங்களுடைய கடையை நடத்தி வருகின்றனர்.
இதுவரை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதற்குக் காரணம் இரண்டு அமைச்சர்கள்தான் என்று வியாபாரிகள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இந்த வியாபாரியின் மீது பதுக்கல் தொடர்பான குற்றத்திற்கும், அரசின் ஆணையை மதிக்காமல் வெங்காயக் கடையைக் காலி செய்யாமல் இருப்பதற்கும், இவர்கள் மீது காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்கெட் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.