சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று(24.12.2024) அங்கு பயிலும் மாணவி ஒருவர் அதே கல்லூரியில் பயிலும் தனது ஆண் நண்பருடன் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் ஆண் நண்பரை தாக்கிவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பில் இருந்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வன்கொடுமை புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் வன்கொடுமை உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், பல்கலைக்கழகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் வளாகத்தில் பணியாற்றிய கட்டுமான தொழிலாளர்கள், காவலர் என பலரிடம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் அவர் குறித்த தகவலை தற்போதுவரை போலீசார் வெளியிடவில்லை. மேலும் அவரிடம் காவல் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கல்லூரி வளாகத்தில் நடந்த சம்பவத்தால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளதாக மாணவர்களும் பெற்றோர்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.