நாமகிரிப்பேட்டை அருகே, தன் மனைவி உடனான உறவைக் கைவிட மறுத்ததால் ஆத்திரம் அடைந்த கூலித் தொழிலாளி, விவசாயியை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த மூலப்பள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் ரவி (55). விவசாயி. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய மனைவி இறந்து விட்டார். இவருடைய மகள் திருமணமாகி வெளியூரில் குடும்பத்துடன் வசிக்கிறார். இதனால் ரவி மட்டும் தனியாக வசித்து வந்தார். ரவிக்கும், உள்ளூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி அல்லிமுத்து மனைவி சாந்தி (45 பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்தது.
இதையறிந்த அல்லிமுத்து இருவரையும் கண்டித்தார். ஆனால் அதைப் பொருட்படுத்தாத அவர்கள் இருவரும் அடிக்கடி ரகசியமாக சந்தித்து தனிமையில் இருந்துள்ளனர். இந்நிலையில் அக். 30ம் தேதி இரவு சாந்தி வீட்டுக்கு ரவி சென்றுள்ளார். இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். வெளியே சென்று இருந்த அல்லிமுத்து திடீரென்று வீட்டுக்கு வந்து விட்டதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த அல்லிமுத்து, வீட்டில் இருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து ரவியை சுட்டுள்ளார். இதில், ரவியின் மார்பில் தோட்டா பாய்ந்து நிகழ்விடத்திலேயே அவர் இறந்து விட்டார். அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது ரவி இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நாமகிரிப்பேட்டை காவல்நிலைய காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், அல்லிமுத்து அடிக்கடி காட்டுப் பகுதியில் வேட்டைக்குச் செல்வார் என்றும், அதற்காக நாட்டுத் துப்பாக்கியை வீட்டில் வைத்து இருந்ததும் தெரியவந்தது. அவருடைய வீட்டிலிருந்து தோட்டா தயாரிப்பதற்கான மருந்து பொருட்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான கணவன், மனைவி இருவரையும் தேடி வருகின்றனர்.