ஒரே இரவில் சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை 9 இடங்களில் கத்தியால் வெட்டி செல்போன் பறித்த கஞ்சா இளைஞர்களை போலீசார் செய்துள்ளனர்.
சென்னை தேனாம்பேட்டையில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை திருட்டு வாகனத்தில் சென்ற கஞ்சா இளைஞர்கள் இருவர் ரோட்டில் கண்ணில் சிக்கியவர்களிடம் எல்லாம் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போன் பறித்து சென்றனர். சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் கடந்த 20-ஆம் தேதி அதிகாலையில் நடந்து சென்று கொண்டிருந்த நபர்கள் சிலரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் ஆகியவற்றை பறித்துச் சென்றதாக புகார்கள் எழுந்தது. இதேபோல சென்னையில் பல இடங்களில் இந்த இளைஞர்கள் கைவரிசை காட்டியதாக புகார் எழுந்த நிலையில் இவர்களை பிடிப்பதற்காக போலீசார் மூன்று தனிப்படைகளை அமைத்தனர்.
இது தொடர்பாக 300க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீசார் சென்னை தேனாம்பேட்டை பகுதியிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் பகுதி வரை திருட்டு வாகனத்தில் சென்று பட்டாகத்தியை காட்டி செல்போன் பறித்துவிட்டு பின்னர் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து வியாசர்பாடி வரை சென்ற அந்த இரு இளைஞர்களை கண்டறிய சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வியாசர்பாடி பி.வி காலனியை சேர்ந்த பரத், ஏழுகிணறு சண்முகராயன் தெருவை சேர்ந்த தனுஷ் ஆகி இரண்டு பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கஞ்சா போதைக்கு அடிமையான இருவரும் யானைகவுனி காவல் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தைத் திருடிக் கொண்டு அதன் மூலம் சென்னையின் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், நந்தம்பாக்கம் என ஸ்ரீபெரும்புதூர் வரை 9 இடங்களில் வழிப்பறி செய்ததை ஒப்புக்கொண்டனர்.
விசாரணையின் பொழுது கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்ட இருவருக்கும் போலீசார் வழக்கம் போல மாவு கட்டு போட்டுள்ள நிலையில் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்துள்ளனர்.