தமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி சட்டமன்றக் கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டிவருகிறார். இந்நிலையில் நேற்று (22.09.2021) 'ஏற்றுமதியில் ஏற்றம்: முன்னணியில் தமிழ்நாடு' என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஏற்றுமதியாளர்கள் மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. மாநாட்டில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “உலகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் 'மேட் இன் இந்தியா' என்று சொல்வதைப் போல், 'மேட் இன் தமிழ்நாடு' என்ற குரல் ஒலிக்க வேண்டும். அதுதான் எங்கள் ஆசையும், லட்சியமும்'' என்றார்.
இந்த மாநாட்டில் ரூபாய் 2,210.54 கோடி மதிப்பிலான 24 தொழில் முதலீடுகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால் 41,695 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், விவசாயிகளுக்கு ஒரு லட்சம் புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை இன்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். சென்னை அண்ணா நூலகத்தில் விவசாயிகளுக்குப் புதிய மின் இணைப்புக்கான ஆணைகளை முதல்வர் வழங்க இருக்கிறார். தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் விவசாயிகளுக்குப் புதிய மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.